பக்கம் எண் :

முதற் காண்டம்30

                28
நிழலிற் கண்சிறை படுத்து நீண்பொழில்
குழலிற் பூச்சிறை படுத்துங் கோதையார்
கழலிற் காற்சிறை படுத்துங் காந்தர்நீர்
விழலிற் றான்சிறை படுத்தும் வேலியே.
 
நிழலின் கண் சிறைபடுத்தும் நீண் பொழில்.
குழலில் பூச் சிறைபடுத்தும் கோதையார்.
கழலில் கால் சிறைபடுத்தும் காந்தர். நீர்
விழலின் தான் சிறைபடுத்தும் வேலியே.

     நீண்ட சோலைகள் தம் நிழலால் பார்ப்பவர் கண்களைச் சிறைப்
படுத்தும். மகளிர் தம் கூந்தலில் பூவைச் சிறைப்படுத்துவர். ஆடவர் வீரக்
கழலினால் தம் கால்களைச் சிறைப்படுத்துவர். நன்செய் நிலம் தன்னுள் நீர்
வந்து பாய்ந்தவிடத்துத் தானே அதனைச் சிறைப்படுத்திக் கொள்ளும்.

     வேலி - இருபது மா கொண்ட நிலப்பரப்பு. இது ஆறு ஏக்கருக்குச்
சமம். இங்கு ஆகு பெயராக நன்செய் நிலத்தைக் குறித்தது. கோதையார்,
காந்தர் என்ற பலர்பாற் பெயர்கள் செய்யுமென்முற்றைக் கொண்டு
முடிந்தது வழுவமைதியாகக் கொள்க.
     
                29
துன்ன லிற்சிறை படுத்தத் தோமிலா
லன்ன பற்சிறை யல்ல தில்லையால்
பொன்ன நற்சிறை யன்னப் புள்ளுறை
மன்ன வர்க்கிறை வழங்கு நாட்டிலே
 
துன் அல் இலில் சிறைபடுத்தத் தோம் இலால்,
அன்ன பல் சிறை அல்லது இல்லை ஆல்,
பொன்ன நல் சிறை அன்னப் புள் உறை,
மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே

     பொன் மயமான நல்ல சிறகை உடைய அன்னப் பறவைகள்
வாழ்வதும், மன்னர்க்கெல்லாம் மன்னனாகிய தாவீது நீதிவழங்குவதுமான
அச்சூதேய நாட்டிலே, இருள் செறிந்த இடத்தில் தள்ளிச் சிறைப்படுத்தத்
தக்க குற்றம் எவரிடமும் இல்லாமையால், மேலே காட்டியது போன்ற பல
வகைச் சிறைகளே அல்லாது, வேறு சிறைகள் இல்லை.

     'ஆல்' அசை நிலை.