பக்கம் எண் :

முதற் காண்டம்304

"வளிச் சிறை ஆக, பொங்கு அலை கீண்டி மரக்கலம்
                          போயின வழியும்,
ஒளிச் சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன
                          வழியும்,
அளிச் சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து, அவை
                          அடைகினும், ஆர்வக்
களிச் சிறை ஆக நீ வரும் வழியே கண்டு, அதை
                          அடைவது   பாலோ?"

     "காற்றைச் சிறகாகக் கொண்டு, பொங்கும் கடலைக் கிழித்துக் கப்பல்
கடந்து போன பாதையையும், ஒளி பொருந்திய தன் சிறகைத் துணையாகக்
கொண்டு ஆகாயத்தில் பல திசைகளையும் கிழித்து அன்னம் பறந்து போன
பாதையையும், ஆசையைச் சிறகாகக்கொண்டு நினைவு சென்ற பாதையையும்
ஆராய்ந்து, அவற்றை அடையக் கூடுமாயினும், ஆர்வம் கலந்த களிப்பைச்
சிறகாகக் கொண்டு, நீ மனிதனாக இவ்வுலகிற்கு வரும் வழியைக் கண்டு,
அதனை அடைவது எனக்கு இயலுவதோ?"

     கப்பல் சென்ற வழி, பறவை சென்ற வழி என்ற இரு உவமைகள்
விவிலியத்தில் (ஞானாகமம் 5 : 9 - 13) காணப் படுபவை. பாவிகளின்
வழிகள் நிலையற்றவை என்று கூறப் பயன்படும் இவ்வுவமைகளை முனிவர்
பரமனின் வழிகள் நம் அறிவைக் கடந்தவை என்று கூறப்
பயன்படுத்துகின்றார்.
 
                   42
உணங்கிய மரத்திற் குயிர்வரும் பெய்த வுறையென
                              வருதியே யுலகிற்
கிணங்கிய விருளைச் சீய்க்கவெங் கதிர்கொள் ளிரவிபோல்
                              வருதியே யெஞ்சா
தணங்கியற் றியவெம் பழம்பழிக் கூளிக் கரியென வருதியே
                              யுன்னை
வணங்கிய நல்லோர்க் கருள்புரிந் தன்னை வருமென
                              வருதியே யென்றான்.