பக்கம் எண் :

முதற் காண்டம்306

     உயர்ந்த வானவர் படையணி தொழத்தக்க தவத்திற்குத் தலைவன்
எனப்படும் சூசை, சூல் முதிர்ந்த மேகம் பெய்த மழையால் பெருகி, சுருட்டி
அடிக்கும் அலை தன் கரையாகிய வயிற்றினுள் அடங்காமல், தேன் நிறைந்த
சோலையையும் வயல்களையும் நிறைக்க ஆறு கரை புரண்டு ஓடிய
தன்மைபோல், வேத நூலறிவினால் சிறந்த தியானத்தில்தான் உணர்ந்தவை
மனத்துள் பொங்கி எழ, தான் கருதிக்கூறிய இவற்றோடு வேறு பலவும்
நிறைந்த மகிழ்ச்சியால் எடுத்துக் கூறுவான்.
 
                   44
தேனுண்ட வுவப்பிற் குயிலிரண் டுண்ட தேனுமிழ்ந்
                          தெனத்தமுள் ளிசலிப்
பானுண்ட நிழல்செய் சினையடுத் தனிதாய்ப் பாடிய
                          வண்ணமே யொருநாள்
கானுண்ட கொடியோ டாரணம் பூண்ட காவல னோடுயிர்
                          விளக்கு
மீனுண்ட முடியாள் ஞானபல் விதிகள் விளம்பிய
                          முறையுரைப் பரிதே.
 
தேன் உண்ட உவப்பில், குயில் இரண்டு, உண்ட தேன்
                   உமிழ்ந்து எனத் தமுள் இசலி
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய்ப் பாடிய
                   வண்ணமே, ஒரு நாள்,
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு,
                   உயிர் விளக்கும் மீன் உண்ட முடியாள்,
ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே. இரண்டு
                   குயில்கள் தேனை உண்ட மகிழ்ச்சியால்,

     தாம் உண்ட தேனையே உமிழ்ந்தாற் போலத் தமக்குள் போட்டியிட்டு,
கதிரவனை உண்டு மறைத்த தன்மையாய் நிழலைத் தருகின்ற கிளையில்
அடுத்து அமர்ந்து இனிதாய்ப் பாடியது போல் மணம் கொண்டுள்ள மலர்க்
கொடியோடு வேதத்தையும் அணிகலனாக அணிந்த காவலனாகிய
சூசையோடு, உயிர்களை விளங்கச் செய்யும் விண்மீன்களை அணிந்த
தலையை உடைய மரியாளும், ஒரு நாள், பல வகைப்பட்ட ஞான
விதிகளைத்தமக்குள் சொல்லிக் கொண்டிருந்த முறை வாயால்
எடுத்துரைப்பதற்கு அரியதாகும்.