பக்கம் எண் :

முதற் காண்டம்317

     அவனும் அவ்வாறெல்லாம் கூறினான், அவளும் அவ்வாறெல்லாம்
கூறினாளென்று கண்டு, தம் உள்ளத்தில் குறையாத வியப்போடு அங்கு
வந்தடைந்த வானத்தை உறைவிடமாகக்கொண்ட படையாகிய வானவரும்
இன்பக் கடலில் மூழ்கினர்; பொங்கிய மகிழ்ச்சியோடு, கெடாத மணமும்
தேன் திரளும் கலந்து பொழியும் பூ மழையைப் பொழிந்தனர், யாவரும்
ஒன்றாய் வாழ்த்துரைத்து நின்றனர்; இவ்விருவரும் உயர்ந்த வானவர்க்கு
நிகராக வாழ்ந்தனர்.

     வானவர் ஒத்து வாழ்ந்தார். "உயிர்த்தெழும் போது பெண்
கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானகத்தில் கடவுளின்
தூதரைப்போல் இருப்பார்கள்." (மத. 22 : 30) என்று இயேசு கூறியதை
முனிவர் சுருக்கி உரைத்தார். எனவே, சூசையும் மரியாளும் இல்லறத்து
இருந்தும் இல்லற இன்பம் நுகராது, மனமொழி மெய்களால் முற்றுந் துறந்த
முனிவராகவே வாழ்ந்தனரென்பது பெறப்பட்டது.

                   இல்லறத் துறவறம்

     -மா, கூவிளம், -விளம், -விளம், -மா  

                  58
துறவி னாலுடல் துறந்தன வுயிரெனத் தோன்றி
நறவி னானனற நறுந்துணர் விள்ளலர் போலில்
லறவி னாவுட னனைவரு மோம்பிய வன்பி
னுறவி னானுல குயிரெலா முடலெனக் கொண்டார்.
 
துறவினால் உடல் துறந்தன உயிர் எனத் தோன்றி,
நறவினால் நறை நறுந் துணர் விள் அலர் போல், இல்-
லற வினாவுடன் அனைவரும் ஓம்பிய அன்பின்
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் எனக்
                                கொண்டார்.

     சூசையும் மரியாளும் கடைப்பிடித்த துறவற ஒழுக்கத்தினால் உடலை
ஒழித்துவிட்ட உயிர்கள் போலத் தோன்றினர். தேனோடு கூடிய வாசனை
கொண்ட பூங்கொத்தில் விரிந்த மணமுள்ள இரு மலர்கள் போல்,
இல்லறத்திற்குரிய விசாரிப்போடு அனைவரையும் பேணிய அன்பின்
உறவினால் உலகிலுள்ள உயிர்களையெல்லாம் தம் உடலாகவே கருதினர்.