64 |
போய
தாதைய ரீட்டிய பொருளெலாம் பொறையேன்
றாய வாயின வனைத்தையு மாலயத் தொருபால்
நேய மாருயிர் நேரிய விரவலர்க் கொருபால்
தூய வாரியர் விரைந்தருந் தொடர்பொடு தொகுத்தார். |
|
போய தாதையர்
ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று
ஆய, ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு பால்,
நேயம் ஆர் உயிர் நேரிய இரவலர்க்கு ஒரு பால்,
தூய ஆரியர், விரைந்து அருந் தொடர்பொடு தொகுத்தார். |
தூய மாண்புள்ள
அவ்விருவரும், இறந்து போன தம் தந்தைமார் தேடி
வைத்த பொருளெல்லாம் தமக்குச் சுமையென்று ஆய்ந்து கண்டமையால்,
தம்மிடம் உண்டான அனைத்தையும் கோவிலுக்கு ஒரு பங்கும், அன்பு
நிறைந்த உயிர் போன்ற இரப்போர்க்கு ஒரு பங்குமாக அரிய அன்போடு
விரைந்து தொகையாகக் கொடுத்தனர்.
65 |
துன்பு
துன்றிய பொருளென வனைத்தையுந் தொகுத்த
பின்பு துன்றிய பேரரி தன்புளந் தூண்டி
யென்பு தந்தினு மினிதென வீகவு முழைத்தே
யன்பு தந்துண வளித்துண வாமழை யொத்தார். |
|
துன்பு துன்றிய
பொருள் என அனைத்தையும் தொகுத்த
பின்பு, துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி,
என்பு தந்தினும் இனிது என ஈகவும் உழைத்தே,
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை ஒத்தார். |
துன்பங்கள்
நெருங்கிச் செறிந்த பொருளென்று மதித்துத்
தம்மிடமுள்ள செல்வம் அனைத்தையும் தொகையாகக் கொடுத்த பின்,
அரிய பேரன்பு தம் உள்ளத்தைத் தூண்டுதலால், தம் உடம்பையே
பிறருக்குத் தந்தாலும் இனிதேயாம் என்று கருதிப் பிறருக்கு ஈயும்
பொருட்டும் உழைத்தனர். அதனால் அன்புடன், உயிர்களுக்கெல்லாம்
உணவை அமைத்துக் கொடுத்துத் தானும் ஓர் உணவுப் பொருளாக
அமையும் மழைக்கு நிகராயினர்.
|