உண்மையைப்
போல அன்பு வேர் விட்டு வளர்ந்த நெஞ்சம் படைத்த
அவ்விருவரும், பொய்யைப் போலப் படர்ந்து துளைபடக் குடைந்த
புண்ணுள்ள ஒருவன் உடலைக் கண்டு, 'ஐயோ! என்று தமக்குள் இரங்கிய
அளவிலே, ஞாயிறு உதித்ததும் இருள் மறைவது போல அப்புண் விரைந்து
மறைந்தது.
69 |
காவி
யுண்டருட் கண்ணினார் முகமனோக் கலினாங்
காவி யுண்டசா வதைக்கடி துமிழ்ந்ததே யமல
னேவி யுந்தவிர்த் தேகிய வியோனசென் றவனைத்
தாவி யுண்டபின் றந்தன திமிங்கிலம் போன்றே. |
|
காவி உண்ட அருட்
கண்ணினார் முகமன் நோக்கலின்,
அங்கு
ஆவி உண்ட சாவு அதைக் கடிது உமிழ்ந்ததே, அமலன்
ஏவியும், தவிர்த்து ஏகிய இயோனசு என்றவனைத்
தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே. |
குற்றமற்றவனாகிய
ஆண்டவனே நினிவே நகர் செல்லுமாறு தன்னை
ஏவியிருந்தும், அதனைத் தவிர்த்து வேறிடம் நோக்கிச் சென்று
கொண்டிருந்த இயோனசு என்றவனைப் பாய்ந்து உண்டபின் மீண்டும்
உமிழ்ந்து தந்த திமிங்கிலம் போல், கருங்குவளை மலரை வென்ற அருள்
கொண்ட கண்களை உடைய சூசையும் மரியாளும் ஆர்வத்தோடு
நோக்கவே, அங்கு ஒருவனது உயிரை உண்ட சாவு விரைவில். அதனை
மீண்டும் உமிழ்ந்தது தந்தது.
இயோனசும் திமிங்கிலமும்:
நினிவே நகரத்தாரைப் பாவத்தினின்று
விடுவிக்கப் போதனைசெய்யுமாறு யோனஸ் இறைவாக்கினரைக் கடவுள் ஏவ,
அவர் தார்சிஸ் நகருக்கு மரக்கலம் ஏறிச் சென்று, மரக்கலம் புயலால்
தாக்குண்ட குற்றம் தமதே யென்று திருவளச் சீட்டினால் தெரியவந்து கடலில்
எறியப்பட்டு, ஒரு திமிங்கிலத்தின் வயிற்றுள் மூன்று நாள் அடங்கியிருந்து,
பின் நினிவை நகர்க் கடற் கரையில் அதனால் உமிழ்ந்து தள்ளப்பட்டார்.
(யோனஸ் 1-2 அதிகாரங்கள்.)
|