70 |
ஓது
முற்றரு ளுறையினா லெவருமுட் காமக்
கோது முற்றழல் குளிரநீக் குவர்கரம் பிடித்தத்
தீது முற்றழல் திளைத்தபோ திலோத்தெனு மவனைச்
சோது மத்தினின் றமரரே துரத்தினர் போன்றே. |
|
ஓதும் முற்று
அருள் உரையினால், எவரும் உள் காமக்
கோது முற்று அழல் குளிர நீக்குவர், கரம் பிடித்து,
தீது முற்று அழல் திளைத்த போது, இலோத்து எனும்
அவனைச்
சோதுமத்தினின்று அமரரே துரத்தினர் போன்றே. |
நகரத்தார் செய்த
பாவத்தினால் மூண்டெழுந்த நெருப்பு சோதும
நகரை விழுங்கியபோது, இலோத்து என்பவனை வானவரே கையைப் பிடித்து
இழுத்து அங்கிருந்து துரத்திக் காத்ததுபோல, சூசையும் மரியாளும் தாம்
எடுத்துக் கூறும் அருள் முதிர்ந்த சொல்லினால், யாவர் உள்ளத்திலும் காமக்
குற்றத்தினால் மூண்டெழும் நெருப்பைக் குளிர்வித்து நீக்குவர்.
இலோத்தை
அமரர் துரத்தியது: சோதோம் போன்ற ஐந்து
நகரங்களையும் நெருப்பினால் அழிப்பதற்கு முன், தன் மனைவி மக்களோடு
வெளியேறுமாறு புண்ணியவானான உலோத்துக்கு வானவர் ஆணையிட்டும்
அவன் தாமதித்த மையால், வானவரே அவர்களைக் கையைப் பிடித்து
வெளியே அழைத்து வந்து, எரியும் நகரைத் திரும்பிப் பாராது வெளியேறச்
செய்தனர். (ஆதி. 19 : 1 - 26)
71 |
அன்பின்
காணியா ரன்பொடு வீங்குமில் லறஞ்செய்
யின்பின் காதலா வின்னுயிர் தன்னிலு மெவர்க்கும்
நன்பின் காவலாய் நவையற நயனெலா நல்கி
முன்பின் காசினிக் கிணையிலா முயன்றதற் களவோ. |
|
அன்பின் காணியார்,
அன்பொடு வீங்கும் இல்லறம் செய்
இன்பின் காதலால், இன் உயிர் தன்னிலும் எவர்க்கும்
நன்பின் காவலாய், நவை அற நயன் எலாம் நல்கி,
முன்பின் காசினிக்கு இணை இலா முயன்றதற்கு அளவோ? |
|