பக்கம் எண் :

முதற் காண்டம்326

     அன்பையே சொத்தாகக் கொண்டுள்ள அவ்விருவரும், அன்போடு
பெருகி வரும் இல்லறம் தரும் இன்பத்தின் ஆசையால், இனிய உயிரினும்
மேலாக யாவருக்கும் நன்மையின் காவலராய் அமைந்து, குற்றங்கள்
நீங்குமாறு நீதி முறைகளையெல்லாம் வழங்கி, முன்னும் பின்னும்
இவ்வுலகில் தமக்கு இணையில்லாதவாறு உழைத்த முறைக்கு அளவும்
உண்டோ?

 
                72
ஆல முற்றிய வகல்புவி நயன்பட வருளின்
கோல முற்றிய குணத்திவர் கெழுவிய கருணை
நீல முற்றிய நெடும்வரை யெங்கணுங் குளிர,
சீல மற்றிய சினைமுகில், பொழிந்தன போன்றே.
 
ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட, அருளின்
கோலம் முற்றிய குணத்து இவர், கெழுவிய கருணை,
நீலம் முற்றிய நெடும் வரை எங்கணும் குளிரச்
சீல முற்றிய சினைமுகில், பொழிந்தன போன்றே

     அருளின் வடிவம் நிறைவுற்றது போன்ற குணச்சிறப்புள்ள
இவ்விருவரும், நஞ்சு முதிர்ந்து கிடந்த இப் பரந்த உலகம் நன்மை
அடையுமாறு கொண்டிருந்த நிறைந்த கருணை, பருவத்தே பெய்யும்
ஒழுக்கத்தையே முதிர்ந்த சூலாகக் கொண்ட மேகம், கருநீல நிறம்
முதிர்ந்த நெடிய மலையின் இடமெல்லாம் குளிருமாறு மழையைப்
பொழிந்தது போன்று தோன்றும்.

     'தோன்றும்' என்ற சொல் வருவித்து முடிக்கப்பட்டது.

 
                 73
கான கத்துற வாயின ரின்னணங் கனிவாய்
வான கத்துற வாயின வில்லறம் வனைந்தார்
மான கத்துற மனவொடு தெய்வத மிறையோ
னூன கத்துற வுரங்கொடு புனைந்தன போன்றே.