பக்கம் எண் :

முதற் காண்டம்328

ஏழாவது
 

ஐயந் தோற்று படலம்
 

       கன்னி விரதம் பூண்ட மரியாள் கருவுற்ற தோற்றங் கண்டு சூசை தன்
மனத்துள் ஐயங்கொண்ட தன்மை கூறும் பகுதி.

                     கன்னி அழியாக் கரு

               - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                   1
மாசறு துறவோ ரன்ன வடதிசை யுள்ளி வெய்யோன்
காசறு மேட முற்றுக் களித்தபங் குனிநாள் கன்னி
யாசறு கடவு ளெய்தி யவதரித் துடலம் போர்த்த
வேசறு காதை பாட வினையவ னடிமேற் கொள்வாம்.
 
மாசு அறு துறவோர் அன்ன, வட திசை உள்ளி வெய்யோன்
காசு அறு மேடம் உற்றுக் களித்த பங்குனி நாள், கன்னி
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த
ஏசு அறு காதை பாட இணை அவன் அடி மேல்
                                    கொள்வாம்.

     மாசற்ற துறவியரைப் போல, ஞாயிறு வடதிசை நோக்கிச் செல்ல
நினைந்து, குற்றமற்ற மேடராசியை அடைந்து களிப்புற்ற பங்குனி மாதத்தில்,
இயல்பாகவே குற்றங்களின் நீங்கிய கடவுள் ஒரு கன்னியின் வயிற்றை
அடைந்து அவதரித்து உடலெடுத்து உதித்த இகழ்ச்சிக்கு இடமேயில்லாத
வரலாற்றைக் கவிதையாய்ப் பாடுவதற்கு, அவனது ஈரடிசளையே
துணையாகத் தலை மேற் கொண்டு பணிவோம்.

     துறவியர் வடதிசை நோக்கி அமர்ந்து தியானத்தில் நிலைத்தல் மரபு.