பக்கம் எண் :

முதற் காண்டம்330

     கருதுதற்கு அரிய கருணை நிறைந்தவனும் ஆறு குணங்கள்
அமைந்தவனுமாகிய ஆண்டவன், வேறு வகையால் அடக்குவதற்கு அரிய
பேயை வென்று உலக மக்களைப் பாவத்தினின்று மீட்டுக் காக்கும்
பொருட்டு, கணக்கில் அடங்காத புண்ணிய வளங்கள் பொருந்திய கன்னி
மரியாளின் வயிற்றில், அடைவதற்கு அரிய முறையால், தானே இவ்வுலகில்
மனிதனாக அவதரித்து வரத் தன் உள்ளத்தில் கருதலுற்றான்.

     'தரணி' ஆகு பெயராக மக்களைக் குறித்தது. 'குணிக்கரும்' என்பது
போன்று அடிதோறும் முதற்கண் நின்ற தொடர்ச் சொற்களும் 'குணக்க
வரும்' என்பது போன்ற தொடர்களின் தொகுத்தல் விகாரங்கள். இறைவன்
ஆறு குணங்கள்: தன் வயத்தன் ஆதல், முதல் இலன் ஆதல், உடம்பு
இலன் ஆதல், எல்லா நலமும் உளன் ஆதல், எங்கும் வியாபகன் ஆதல்,
எல்லாவற்றிற்கும் காரணன் ஆதல் என்பன. விரிவு:
     
      27-வது, ஞாபகப்படலம், பாடல் 155-165 காண்க,

 
                       4
மணமுடித் தேழாந் திங்கள் வளர்ந்துதேய்ந் தொழுகா முன்னர்க்
கணமுடிக் கன்னி யுள்ளங் கனிவியைந் தமையக் கஞ்ச
மணமடற் குவியுங் காலை வந்தபங் குனியை யைநாட்
கணமெனக் கபிரி யேலைக் கடவுளே விட்டா னன்றோ.
 
மணம் முடித்து ஏழாம் திங்கள் வளர்ந்து தேய்ந்து ஒழுகா முன்னர்,
கணமுடிக் கன்னி உள்ளம் கனிவு இயைந்து அமைய, கஞ்ச
மண மடல் குவியும் காலை, வந்த பங்குனி ஐ ஐ நாள்,
கணம் எனக் கபிரியேலைக் கடவுளே விட்டான் அன்றோ.

     சூசையும் மரியாளும் திருமணம் முடித்து ஏழாம் மாதம் வளர்ந்து
தேய்ந்து மறைவதற்கு முன், நிகழ்ந்து கொண்டிருந்த பங்குனி மாதத்து
இருபத்தைந்தாம் நாளில், தாமரையின் மணமுள்ள இதழ்கள் குவியும்
மாலை வேளையில், வீண்மீன்களை முடியாக அணிந்த கன்னி மரியாள்
மனம் கனிவோடு இசைவதன் மூலம் தான் கருதியது அமையுமாறு, ஒரு
கணம் என்று சொல்லத் தக்க விரைவோடு கபிரியேல் என்ற வானவனை
அவள் பால் கடவுளே அனுப்பி வைத்தான்.