பக்கம் எண் :

முதற் காண்டம்331

     'கருதியது' முன் பாடலிற் கூறப்பட்டது. 'அன்றோ' அசை நிலை.
பங்குனி 25 என்பது பங்குனி மாதத்தில் வருகின்ற மார்ச் 25ஆம் நாள்
என்று கொள்க. இவ்வாறு குறிப்பிடுவது தமிழகத் திருச்சபையில் வழங்கி
வந்த முறை யாகும்.

 
                     5
தூதென வலியோ னாய கபிரியேல் சுடரைச் சூட்டிக்
கோதென விருளை நீத்த கோதைகண் விரைவிற் சென்று
சீதென மதியந் தாங்குஞ் சேவடி பணிய வீழ்ந்து
போதென வழிந்த தேனைப் பொருதுவெல் லுரையுற் றானே.
 
தூது என, வலியோன் ஆய கபிரியேல் சுடரைச் சூட்டி,
கோது என அவ் இருளை நீத்த கோதைகண் விரைவில் சென்று,
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து
போது என வழிந்த தேனைப் பொருது வெல் உரை உற்றானே.

      வலியோன் என்றும் பொருள் கொண்ட கபிரியேல் எனும்
பெயர்கொண்ட வானவன் ஒளிச்சுடரை உடலெல்லாம் அணிந்து, பாவம்
ஆகிய இருளை அறவே விலக்கிய மாலை போன்ற மரியாளிடம்
தூதுவனாக விரைந்து சென்று, குளிர்ச்சி பொருந்திய திங்கள் தாங்கி
நிற்கும் அவளது செந்நிறக் கால்களில் பணிவோடு விழுந்து வணங்கி,
மலரினின்று வழிந்த தேனைப் போரிட்டு வென்ற இனிய சொல்லை
பேசத் தொடங்கினான்:

     கபிரியேல் தூதுச் செய்தி, லூக்: 1 : 26-38 காண்க. கபிரியேல்
என்ற எபிரேயச் சொல்லுக்கு கடவுளின் வீரன் என்பது பொருள்.
அதனை வலியோன் என்ற சொல்லால் முனிவர் சுட்டுகின்றார்.

 
                   6
பொய்யகன் றெழுவ தெய்வப் பூரண வோகை யாளே
யையகன் றுவப்பி னாத னடைந்துவாழ் நெஞ்சத் தாளே
வையகம் வைகும் வாய்ந்த மாதரு ளெண்ணி லாசி
துய்யகம் பொலியகப் பூத்த சுந்தரி வாழி யென்றான்.