|
தன்னை அடுத்தவற்றைக்
கண்ணாடி காட்டும் தன்மைபோல்'
இவள் உள்ளத்தில் வருத்தியவற்றை முகக்குறியால் உணர்ந்து கொண்ட
கபிரியேல் பின்வருமாறு உறுதி சொல்வான்: "உன்னை அடுத்து விளங்கும்
ஆண்டவனுக்கு அன்பு மேலோங்குமாறு மகிழ்ச்சியூட்டிய புண்ணிய
வளங்கள் மிகுந்து உயர்ந்த பெண்ணே, உள்ளம் மயக்கமுற்றதுபோல நீ
வருந்துதல் ஏன்?"
"அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்."
என்ற குறள் (706) இங்கு மிளிர்வதைக் காண்க.
| 10 |
மதிபழித்
திலங்கு சங்கின் வாய்ந்தசூல் பழித்தீங் குள்ள
விதிபழித் தரிய வாற்றால் வேய்ந்ததோர் கருப்ப மாகி
நிதிபழித் தொளிர்ந்த தோன்றல் நீபயந் தவற்கி யேசு
துதிபழித் துயர்ந்த நாமஞ் சொற்றுவாய் கன்னி மாதே |
| |
மதி பழித்து
இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து, ஈங்கு உள்ள
விதி பழித்து, அரிய ஆற்றால் வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி,
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீ பயந்து, அவற்கு இயேசு
துதி பழித்து உயர்ந்த நாமம் சொற்றுவாய், கன்னி மாதே!" |
"கன்னிப் பெண்ணே,
திங்களை நிறத்தாலும் ஒளியாலும் பழித்து
விளங்கும் சங்கினிடத்து வாய்ந்த கருவையும் பழித்து, இவ்வுலகில்
கருவுறுவதற்கென நடைமுறையிலுள்ள விதி முறையையும் விலக்கி, அரிய
வழியால் அமைந்ததொரு கருப்பம் நீ அடைந்து, பொன்னையும் பழித்து
ஒளிர்ந்த ஒரு மகனை நீ பெற்றெடுத்து, அவனுக்குப் புகழையெல்லாம்
பழித்து உயர்ந்த இயேசு என்னும் பெயர் சூட்டி அழைப்பாய்."
ஆண் துணையின்றிச்
சங்கினிடத்து முத்து கருவாகிப் பிறப்பதுபோல்,
அரிய முறையால் அம்மகன் கருவாகிப் பிறப்பானென்பது கருத்து. இயேசு
என்ற பெயருக்கு 'மீட்பர்' என்பது பொருள். (மத்தேயு. 1:21)
|