பக்கம் எண் :

முதற் காண்டம்336

"தொய்யல் உற்று இறைவன் தாளைத் தொழுது வாழ்
                            திருவல்லோனே,
மய்யல் அற்று, அழிவு இல் கன்னி, மைந்தனைப் பெறுதல்
                            ஏது?" என்று
அய்யம் உற்று இவள் வினாவ, அரிய மாது அடியைப்
                            போற்றி
வெய்யில் உற்று அடைந்த தூதன், விடை மொழி
                            உரைப்பான் மன்னோ.

     "இன்பங் கொண்டு இறைவன் திரு அடியைத் தொழுது வாழும்
செல்வங்கொண்ட வல்லவனே, அழிவு இல்லாத கன்னி மயக்கமற்று மகனைப்
பெறுதல் எவ்வாறு?" என்று ஐயங் கொண்டு இக்கன்னி மரியாள் வினவ,
உடலெல்லாம் ஒளிக்கதிர் கொண்டு வந்தடைந்த அத்தூதன் அவ்வரிய
பெண்ணின் அடியைப் போற்றிப் பின்வருமாறு விடைமொழி கூறுவான்:

     'மன்னோ' அசைநிலை. மய்யல், அய்யம் - மையல், ஐயம் என்ற
சொற்களின் முதற் போலி. வெய்யில் - வெயில் என்பதன் இடைப் போலி.
 
                   13
காருலா முலகு மாங்கு கதிருலாஞ் சுடரை யெல்லாங்
காருலா முலகும் யாவுங் காரண மொன்று மின்றிச்
சீருலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை யீன்றுஞ்
சீருலாங் கன்னி யாதல் சேர்த்தலே யரிதென் பாயோ.
 
"கார் உலாம் உலகும் அங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம்
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றிச்
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின், மகவை ஈன்றும்
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ?"

     "மேகங்கள் உலாவும் வானுலகையும், அங்கே கதிர் வீசி உலாவும்
எல்லாச் சுடர்களையும், கடல் சூழ்ந்து உலாவும் மண்ணுலகையும், அங்குள்ள
பொருள்கள் யாவற்றையும், மூல காரணப் பொருள் ஒன்றும் இல்லாமலே,
சிறந்து விளங்கும் வல்லபம் கொண்ட ஆண்டவன் படைத்து மைத்துள்ளான்.
அப்படியிருக்க, நீ பிள்ளையைப் பெற்றும் சிறப்புப் பொருந்திய கன்னியாக
விளங்கும்படி அமைத்தல் அவனுக்கு ஓர் அரிய செயல் என்பாயோ?"