|
ஆள் வகையில் மூவரெனினும்
கடவுள் தன்மையில் மூவரும் ஒருவரே
என்பது நம் அறிவுக்கு எட்டாதெனினும் கடவுளே வெளிப்படுத்திய
உண்மையாதலால் ஏற்றுக்கொள்ள வேண்டியது.
| 17 |
தேற்றுரை
யுரைத்த தூதன் செப்பிய யாவுங் கேட்டு
வேற்றுரை யுரைத்தி லாளுள் விழைவுற விறைவன் றாளைப்
போற்றுரை யுரைத்துக் கேட்ட புதிவினை யோர்ந்து சாவி
யேற்றுரை யுடைத்த கன்னி யிரவெலாம் போக்கி னாளே. |
| |
தேற்று உரை உரைத்த
தூதன் செப்பிய யாவும் கேட்டு
வேற்று உரை உரைத்திலாள், உள் விழைவு உற இறைவன்
தாளைப்
போற்று உரை உரைத்து, கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி,
ஏற்று உரை உடைத்த கன்னி, இரவு எலாம் போக்கினாளே. |
புகழுரைகளையெல்லாம்
உடைத்து உயர்ந்த கன்னியாகிய மரியாள்,
தேறுதல் மொழி பேசிய தூதன் சொல்லிய யாவற்றையும் கேட்டு மறுமொழி
சொல்லாதவளய், தன் உள்ளம் விருப்பங் கொள்ள ஆண்டவன்
திருவடிகளைப் போற்றும் சொல் ஒன்றே உரைத்து, தான் கேட்ட
புதுமையான செய்தியை உணர்ந்து தனக்குள் ஆராய்ந்து, அவ்விரவுப்
பொழுதையெல்லாம் போக்கினாள்.
| 18 |
அருள்புறங்
கண்ட செல்வத் தமலைமுன் னெளிமை யுள்ளி
வெருள்புறங் கண்டு கூசி வெறுத்தலோ டமைத றேற்றாள்
தெருள்புறங் கண்ட மீனிற் றிருமுகத் தொளிவில் வீச
விருள்புறங் கண்ட பாரிற் கெரிவிளக் கொப்ப நின்றாள். |
| |
அருள் புறம் கண்ட
செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி,
வெருள் புறம் கண்டு, கூசி, வெறுத்தலோடு அமைதல் தேற்றாள்,
தெருள் புறம் கண்ட மீனின் திரு முகத்து ஒளி வில் வீச,
இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள். |
|