பக்கம் எண் :

முதற் காண்டம்340

     அவ்வாராய்ச்சியினால் அச்சத்தை வென்றாலும் தெய்வஅருள்
வெளிப்பட்டுத் தோன்றக்கண்ட இச்செல்வத்து மிகுதியின் முன் தனது
எளிமையை எண்ணிப் பார்த்து, கூசி, அதனை வெறுத்தலும் ஏற்றலும்
தெளியப் பெறாதவளாய், தன் திருமுகத்தின் ஒளி, தெளிவைத்
தன்னிடத்துக்கொண்ட விண்மீன் போல் வில்லொளி வீச, இருளைத்
தன்னிடத்துக்கொண்ட இவ்வுலகிற்கு எரியும் விளக்குப்போல் மரியாள்
நின்றாள்.
 
                   19
இன்னவா யுசாவும் வேளை யிளம்படி யன்ன வோர்நற்
கன்னிவாய் மொழியைக் கேட்பக் கடவுளுங் கடவு டன்னைத்
துன்னிவா ழமரர் யாருந் துகடவிர்ந் துலக மெல்லா
மன்னவா யுய்யு மென்ன வவாவொடு நிற்பாரன்றோ.
 
இன்னவாய் உசாவும் வேளை, இளம் பிடி அன்ன ஓர் நல்
கன்னி வாய் மொழியைக் கேட்ப, கடவுளும் கடவுள் தன்னைத்
துன்னி வாழ் அமரர் யாரும், துகள் தவிர்ந்து உலகம் எல்லாம்
அன்ன வாய் உய்யும் என்ன, அவாவொடு நிற்பார் அன்றோ.

     இவ்வாறாக மரியாள் தனக்குள் ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில்,
கடவுளும் கடவுளை அடுத்து வாழும் வானவர் யாவரும், அந்த
வாய்மொழியால் உலகமெல்லாம் பாவம் நீங்கி உய்வு பெறும் என்பதனால்,
இளம் பெண் யானை போன்ற ஒரு நல்ல கன்னியாம் மரியாளின்
வாய்மொழியைக் கேட்க ஆவலோடு நிற்பாராயினர்.

     'அன்றோ' அசைநிலை. நான்காமடியில் 'வாய்' ஆகுபெயராய்ச்
சொல்லை உணர்த்திற்று.
 
                     20
சூழ்திரை யுடுத்த பாரிற் றோன்றிய நவத்தைக் காண்டற்
காழ்திரை விரைவி னீக்க வாதவன் கதித்துத் தூண்டுந்
தாழ்திரை யாழ்ந்த பாய்மாத் தழல்சினத் துயிர்த்த தென்னக்
கீழ்திரை கவிந்த வானங் கேழொளி சிவந்த தன்றோ.