பக்கம் எண் :

முதற் காண்டம்341

சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தைக் காண்டற்கு
ஆழ்திரை விரைவின் நீக்க ஆதவன் கதித்துத் தூண்டும்
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது                                         என்னக்
கீழ் திரை கவிந்த வானம் கேழ் ஒளி சிவந்தது அன்றோ.

     தன்னைச் சூழ்ந்துள்ள கடலை ஆடையாக உடுத்துள்ள இவ்வுலகில்
நடக்கவிருக்கின்ற புதுமையைத் தானும் காணும்படியாக, ஆழமான கடலை
விரைவில் கடக்கக் கதிரவனால் விரைந்து தூண்டப்படும் தாழ்ந்த கடலுக்குள்
ஆழ்ந்து கிடந்த பாயும் குதிரைகள் சினத்தால் நெருப்பைக் கக்கியதுபோல்
கீழ்த்திசையில் கடலோடு கவிந்து நின்ற வானம் செந்நிற ஒளியால் சிவந்து
தோன்றியது.

     'அன்றோ' அசைநிலை. பாய்மா-விலங்கினப் பொதுவாகிய 'மா' என்ற
பெயர் 'பாய்' என்ற அடைமொழியால், பாய்ந்தோடும் குதிரையைக் குறித்தது.
உதய காலத்தில் இயல்பாகச் சிவந்து தோன்றும் கீழ்வானத்தை இவ்வாறு
கற்பனை செய்து கூறியது தற்குறிப்பேற்றவணி. கதிரவன் நேரில் ஏழு
குதிரைகள் பூட்டப்பட்டுள்ளதாகக் கூறுதல் மரபு.
 
                     21
நன்னிலா உதயத் தெந்தை நயப்புற வியப்ப வானோர்
மன்னியா மெவரும் வாழ்க வந்தவா னவனை நோக்கி
கன்னிதாழ் சிரத்தைக் கோட்டிக் கடவுளா ளென்னை யிந்தோ
பன்னியா யினநின் வாய்ச்சொற் படியெனக் காக வென்றாள
 
நல் நிலா உதயத்து, எந்தை நயப்பு உற, வியப்ப வானோர்,
மன்னி யாம் எவரும் வாழ்க, வந்த வானவனை நோக்கி,
கன்னி தாழ் சிரத்தைக் கோட்டி, "கடவுள் ஆள் என்னை, இந்தோ,
பன்னி, ஆயின நின் வாய்ச் சொற்படி, எனக்கு ஆக!" என்றாள்.

     எம் தந்தையாகிய இறைவன் இன்பமுறவும், வானவர் வியக்கவும்,
மனிதராகிய நாம் அனைவரும் நிலையான பேரின்ப வாழ்வு பெறவும்
நல்லொளி படைத்த கதிரவன் உதிக்கும் வேளையில், கன்னி மரியாள் தன்
குனிந்த தலையைச் சற்றே வளைத்து, அங்கு வந்து நின்ற வானவனை
நோக்கி, "இதோ, கடவுளின் அடிமையாகிய என்னை ஆராய்ந்து, அதன்
மூலம் தகுதி என்று ஏற்பட்ட உன் வாய்ச் சொல்லின்படியே, இது எனக்கு ஆவதாக!" என்றாள்.