பக்கம் எண் :

முதற் காண்டம்342

     முன் பாடலில் 'ஆதவன்' என வெளிப்படச் சுட்டியுள்ளமை யாலும்,
இப்பாடலில் 'நல்' என அடைமொழி கொடுத்தமை யாலும், 'நிலா' இங்குக்
கதிரவனை குறித்தது.
 
                     22
என்றுளி கடுத்த வன்பா லிதயங்கூர்ந் துயிர்த்த செந்நீர்
மின்றுளி மூன்றுஞ் சேர்ந்தோர் மெல்லுட லாயுள் ளாவி
சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி
யொன்றுளி யிறைவன் மைந்த னோர்மனு மகனு மானான்.
 
என்ற உளி, கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர்
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய், உள் ஆவி
சென்ற உளி, மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி
ஒன்று உளி, இறைவன் மைந்தன் ஓர் மனு மகனும் ஆனான்.

     'எனக்கு ஆக!' என்று கன்னிமரியாள் இசைவு கூறியபோது, கடவுள்மீது
கொண்ட மிக்க அன்பால் அவள் இதயம் பொங்கித் தெறித்த ஒளியுள்ள
இரத்தத் துளிகள் மூன்றும் சேர்ந்து ஒரு மெல்லிய உடல் உருவாகி,
அதனுள்ளே திருமகனாகிய கடவுளின் உயிர் சென்று பொருந்தியபோது,
அதனால் வாய்ந்த மனித இயல்பும் தெய்வ இயல்பும் பொருந்தப் பினைந்து
ஒன்றிய தன்மையால், கடவுள் மகன் ஒரு மனித மகனும் ஆனான்.

     என்றுளி, சென்றுளி என்பன என்றவுளி, சென்றவுளி என்பவற்றின்
தொகுத்தல் விகாரங்கள்.
 
                     23
மீயகன் றுயர்ந்த மாண்பாள் விளங்கவே யுலக மூன்று
மாயகன் றொன்று நீத்தை யாயிரத் திருநூ றாண்டிற்
பாயகன் றொளியிற் சான்றோன் படரிரு ணீக்கு முன்னே
நாயகன் மருளை நீக்க நானென வாயி னானே.