பக்கம் எண் :

முதற் காண்டம்343

மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே, உலகம்
                                   மூன்றும்
ஆய் அகன்று, ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில்,
பாய் அகன்று ஒளியின் சான்றோன் படர் இருள் நீக்கு
                                   முன்னே,
நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே.

     மூன்று உலகங்களும் உண்டாகித் தொடர்ந்து, ஒன்று குறைய,
ஐயாயிரத்து இருநூறாம் ஆண்டு நடக்கையில் ஒளியில் மிக்கவனாகிய
கதிரவன் அகன்று விரிந்து, படர்ந்த இருளை நீக்குவதற்கு முன்னே,
மேலுலகத்தையும் தாண்டி உயர்ந்த மாண்புள்ள மரியாள்புகழால்
விளங்குமாறு, பாவமாகிய மயக்கத்தைப் போக்க ஆண்டவன் "நானே
இருக்கிறேன்" என்று முன்வந்தான்.

     ஒன்று குறைய 5200 = 5199. பழைய பதிப்பின் அடிக் குறிப்பு:
சத்திய வேதாகமங்களின் பலவிடத்துள்ள வருஷக் கணக்குகளைத் தொகுத்து,
முன் காலத்துச் சாஸ்திரிகளிற் சிலர், கிறேக்குப் பிரதிகளைப்பற்றி, உலகம்
உண்டான நாள் முதல் பரமகர்த்தர் அவதரிக்கு மட்டும் 5199 வருஷம்
நடந்தனவென்றும், வேறு அநேகர் எபிறைய பிரதிகளைப் பற்றி, 4004
வருஷம் நடந்தனவென்றும் எண்ணியிருந்தார்கள். இவ்விருத்தத்தில்
வீரமாமுனிவர் கிறேக்கு பிரதிக் கணக்கைத் தந்தார்; 14-ம் படலத்து 98-ம்
விருத்தத்திலோ வென்றால், எபிறைய பிரதிக் கணக்கைத் தந்தார். ஆனால்,
வேதாகமங்களில் சகல பெயரும் எழுதப்பட்டது சந்தேகமாயிருப்பதால், ஷெ
கணக்குத் தொகை பார்ப்பது வீண். மேலும், இவ்விஷயத்திலே திருச்சபை
ஏதுந் தீர்மானிக்கவில்லை.
 
                   24
ஆதனே விதித்த நாளு மமையமு மாகும் வேலை
யேதமே விளைத்த வாத னிழிவொழித் துயிர்கள் யாவு
நாதனே யளிப்பச் சுங்க நாளையி லுதித்து முன்னோர்
வேதமே யுரைத்த வண்ணம் விகலமற் றாயிற் றன்றோ.
 
ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை,
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும்
நாதனே அளிப்ப, சுங்க நாளையில் உதித்து, முன்னோர்
வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று
                                    அன்றோ.