பக்கம் எண் :

முதற் காண்டம்350

                  34
இலக்க மாக நேமி மீதி லினிதெ ழும்ப தங்கனீ
யுலக்க மாக வீதி தீத ரொழுக லின்றி யுண்டதோம்
விலக்க மாக நாத னாகி மெலிய மைந்த னென்றுளாய் கலக்க மாக நேமி தேயு கடிய கங்க லங்கவே
 
"இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ,
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம்
விலக்கம் ஆக, நாதன் ஆகி, மெலிய மைந்தன் என்று                                        உளாய்,
கலக்கம் ஆக நேமி தேயு கடி அகம் கலங்கவே."

     "உலகத்தின் மீது விளக்கம் உண்டாகுமாறு இனிதே எழுந்து வரும்
கதிரவனாகிய தீ, தமக்கே கேடு உண்டாகுமாறு தீயோர் அறநெறியில்
ஒழுகாமையால் சுமந்து கொண்ட பாவம் விலகும்படியாகவும், கலக்கம்
உண்டாகுமாறு உலகத்தைப் பாவத் தூண்டுதலால் தேயச் செய்யும்
பேய்கள் மனம் கலங்கும் படியாகவும், ஆண்டவனாய் இருந்தும், ஒரு
மனிதனாக மெலிந்து தோன்றவிருக்கின்றாய்."

     'தீதர் வீதி ஒழுகல் இன்றி' என மாற்றிக் கூட்டுக.

 
                   35
அகங்க லங்க முனையு டன்றி யழிவு குங்கு ணுங்கினம்
நகங்க லங்க வுருமி ழிந்த நடையில் மண்டெ ரிந்ததீச்
சகங்க லங்க வெருவ டைந்து சடிதி யின்றி ழிந்ததா
முகங்க லங்க வுறும ரந்தை முடிய மண்ட லங்களே.
 
"அகம் கலங்க முனை உடன்றி அழிவு உகும் குணுங்கு                                         இனம்,
நகம் கலங்க உரும் இழிந்த நடையில், மண்டு எரிந்த தீச்
சகம் கலங்க வெரு அடைந்து, சடிதி இன்று இழிந்தது ஆம்,
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண்தலங்களே."

     "மண்ணுலக மெங்கும் மனிதர் முகம் கலங்குமாறு அடையும்
துன்பமெல்லாம் முடியும்படியாக, இதுவரை மக்கள் மனங் கலங்குமாறு
போர் நிகழ்த்தி அழிவைச் சொரிந்து கொண்டிருந்த பேய்க் கூட்டம்,
மலை கலங்குமாறு இடி பாய்ந்த தன்மைபோல, மூண்டு எரிந்த
நெருப்புலகமாகிய நரகமும் நடுங்குமாறு அஞ்சி, விரைவில் இன்றே
விழுந்ததுபோல் ஆகும்."