பக்கம் எண் :

முதற் காண்டம்355

     "மானிடர் மீட்புப் பெறுமாறு தானே மானிடன் ஆகிய ஆண்டவன்
வாழ்க, வாழ்கவே! பிறருக்கு நலங்களெல்லாம் தருமாறு தான் வறுமையே
மிகுதியாகக் கொண்ட இரக்கமுள்ள நாதன் வாழ்க, வாழ்கவே! என்றும்
நிலைபெறு வானுலகில் வாழ்வும் இம்மண்ணுலகின் வாழ்வுமாகிய
இறைவன் வாழ்க, வாழ்கவே! கருணைக் கடல் வாழ்க, வாழ்கவே!
இனிமைக் கடல் வாழ்கவே!".

 
                43
என்று பாவ ழங்கு மாரி யித்தி றத்து குத்தபின்
மன்று பூவ ழங்கு மாரி மட்டி னத்தி றக்கிய
கன்று நீர்வ ழங்கு மாரி கற்றை விட்ட மாரியுங்
குன்று மீவ ழங்கு மாரி குறையெ னப்ப ரப்பினார்.
 
என்று பா வழங்கும் மாரி இத் திறத்து உகுத்த பின்,
மன்று பூ வழங்கும் மாரி, மட்டு இனத்து இறக்கிய
கன்று நீர் வழங்கும் மாரி கற்றை விட்ட மாரியும்,
குன்று மீ வழங்கும் மாரி குறை என, பரப்பினார்.

     என்று இவ்வாறெல்லாம் வானவர் பாடலால் வழங்கும் மழையைப்
பொழிந்த பின்னர், மலையின்மீது பொழியும் மழை குறையுடையது
என்னத் தக்க வகையில், மணமுள்ள மலர்களால் பொழியும் மழையும்,
தேனுள்ள மலர் இனங்களால் காய்ச்சி, வடித்து இறக்கிய பன்னீரால்
பொழியும் மழையும், திரளாகப் பொழிய விட்ட ஒளிக்கதிர் மழையும்
பெய்து பரப்பினர்.

     'இறக்கிய கன்று' என்றதனைக் 'கன்று இறக்கிய' என்று கொள்க.

                  உலகம் கொண்ட உவகை

               - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
                                  44
ஒளிமு கத்துள யாவுமு வந்ததொத்
தளிமு கத்தம லன்மனு வாயின
களிமு கத்துயர் காயமொ டார்கல
நளிமு கத்தகல் ஞாலந யந்ததே.