பக்கம் எண் :

முதற் காண்டம்359

              50
நெடிது நாள்வெளி மூடிய நீன்முகில்
கடிது போதலில் வான்கதிர் கான்றெனக்
கொடிது நோயொழ யுங்குணத் தன்றணி
முடிது ழாவெழின் முற்றின ஞாலமே.
 
நெடிது நாள் வெளி மூடிய நீல் முகில்
கடிது போதலில் வான் கதிர் கான்று என,
கொடிது நோய் ஒழியும் குணத்து, அன்று, அணி
முடி துழாவு எழில் முற்றின ஞாலமே.

     நெடு நாட்களாக ஆகாயத்தை மூடிக்கொண்டிருந்த கருமேகங்கள்
விரைந்து விலகிப் போதலால் வானம் கதிரொளியைப் பொழிந்ததுபோல,
தருமகன் அவதரித்த அந்நாளில், கொடிய நோய்கள் ஒழிந்து தன்மையால்,
அணிந்த முடியினின்று பரவுவது போன்றதோர் அழகொளி உலகமெங்கும்
நிரம்பியது.

     முற்றின - 'முற்றினது' என்ற சொல்லின் ஈறுகெட்டது.
 
                51
அலகற் றாயின வாண்டகை யோர்மக
னுலகத் தாயின னென்றுண ராத்தவத்
திலகத் தாவிய மாண்பிய லோர்க்கெதிர்
விலகத் தாவிய மீகளி கூர்ந்ததே.
 
அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன்
உலகத்து ஆயினன் என்று உணராத் தவத்து
இலகத் தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர்
விலகத் தாவிய மீ களி கூர்ந்ததே.

     அளவே இல்லாது அமைந்துள்ள ஆண்டவன் இவ்வுலகத்தில்
ஒரு மனிதனாய் அவதாரம் எடுத்தான் என்ற உண்மையை உணராமல்,
தவ நெறியில் விளங்குமாறு ஒங்கிய மாண்புடையோர்க்கு அந்நாளில்
ஒப்பில்லாது ஓங்கிய மேலான் மகிழ்ச்சி மிகுதியாயிற்று.