பக்கம் எண் :

முதற் காண்டம்36

                39
தோடணி கவினொடு தூங்குங் குண்டல
நீடணி மதிமுக நிழல்செய் மாதரோ
கோடணி யெழுதருங் கோலப் போதொடு
சேடணி கனிநலந் திளைத்த சோலையே.
 
தோடு அணி கவினொடு தூங்கும் குண்டலம்
நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ
கோடு அணி எழு தரும் கோலப் போதொடு
சேடு அணி கனி நலம் திளைத்த சோலையே?

     மரக் கிளைகளில் அணியணியாக எழுந்து நிற்கும் அழகிய பூக்களோடு
அழகு பொருந்திய கனிகளின் நலமும் நிறைந்த சோலைகள், காதுகளில்
தோடுகள் அணிந்த அழகோடு தொங்கும் குண்டலங்களும் மிகுதியான பிற
அணிகலன்களும் சந்திரன் போன்ற தம் முகத்திற்கு ஒளிசெய்ய நிற்கும்
மகளிர் என்போமோ?  

                40
நீனிரைத் தெழுதிய படத்தி னேருடு
மேனிரைத் தெழுதிய விசும்பின் றோற்றமோ
கானிரைத் தெழுந்தளிர்க் காழ கத்துயர்
தேனிரைத் தவிழ்மலர் திளைத்த சோலையே.
 
நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர், உடு
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ,
கால் நிரைத்து எழும் தளிர்க் காழகத்து உயர்,
தேன் இரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே.

     கிளைகளில் வரிசையாக எழுந்து நிற்கும் தளிர்களின் கருநிறத்திடையே
உயர்ந்து, வண்டுகள் ஒலிப்பதனால் விரியும் மலர்கள் நிறைந்துள்ள சோலை,
வரிசையாகச் சித்திரம் தீட்டிய நீலப் போர்வைக்கு நிகராக, மேலே
விண்மீன்களை வரி1சையாகத் தீட்டி வைத்தது போன்ற வானத்தின் தோற்றம்
என்போமோ? 'நிரைத்து எழுதிய நீல் படம்' என்று மாற்றிக் கூட்டுக.

     நீல் - 'நீலம்' என்பதன் கடைக்குறை.