41
|
அப்புறத்
தமுதுணுஞ் சிறைப்பொற் பார்த்தபுள்
ளிப்புறத் தலர்கள்கொய் யிளைஞர் வாண்முகம்
முப்புறத் தெழுதிய முகைகள் காட்டிய
துப்புறச் சித்திரக் கூடஞ் சோலையே. |
|
அப்புறத்து
அமுது உணும் சிறைப் பொற்பு ஆர்த்த புள்,
இப் புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம்,
முப் புறத்து எழுதிய முகைகள் காட்டிய
துப்பு உறச் சித்திரக் கூடம் சோலையே. |
சோலையின்
அப்பக்கம் தத்தமக்கு உரிய உணவை உண்ணும்
சிறகுகளால் அழகு நிறைந்த பலவகைப் பறவைகள்; இப்பக்கம் மலர்களைக்
கொய்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஒளியுள்ள முகங்கள்;
முப்பக்கங்களிலும் தீட்டி வைத்தவைபோன்ற மொட்டுக்கள். இவ்வாறு
காட்டிய அழகுப் பொலிவை நோக்குமிடத்து, ஒரு சித்திரக் கூடமாகவே
சோலை காட்சியளிக்கும்.
அப்புறம்
இப்புறம் என்று முதலிற் கூறி, பின் முப்புறம் என்றது,
எப்புறமும் என்ற பொருள் கருதியது. 'இளைஞர்' எனப் பொதுப்படக்
கூறியிருப்பினும், 'மலர் கொய்தல்' என்ற குறிப்பால், இள மகளிர் என்றே
கொள்க.
42
|
கயிற்றுணைக்
கலனெனக் கம்பி றூங்கலர்
குயிற்றுணை குயிலவுங் குழல்வண் டூதவு
மயிற்றுணை யுலவிவந் திரட்ட மற்றெலாம்
பயிற்றுணை களிமணப் பந்தர் சோலையே. |
|
கயில்
துணைக் கலன் எனக் கம்பில் தூங்கு அலர்,
குயில் துணை குயிலவும், குழல் வண்டு ஊதவும்,
மயில் துணை உலவி வந்து இரட்ட, மற்று எலாம்
பயில் துணை களி மணப் பந்தர் சோலையே. |
கொம்புகளில்
தொங்கும் மலர்கள் பூட்டுவாயிற் பொருந்திய இரட்டை
வட ஆபரணம் போல் தோன்றவும், குயில்கள் துணைக் குயில்களைக்கூவி
அழைக்கவும், வண்டுகள் குழலிசைபோல் ஊதவும், மயில்கள் இணை
இணையாக உலாவி வந்து ஒலிக்கவும், மற்றப் பறவைகளெல்லாம் வரவேற்று
அழைக்கும் தன்மையாய் அமையவும், களிப்பிற்கிடமான திருமணப்பந்தல்
போல் சோலை விளங்கும்.
பந்தர்
- 'பந்தல்' என்ற சொல்லின் கடைப்போலி.
|