பக்கம் எண் :

முதற் காண்டம்38

                 43
முதிர்செயுங் கனிமலர் மொய்த்துத் தூங்கலோ
டுதிர் செயும் பழந்துண ரொளிசெய் குப்பையாற்
கதிர்செயு முடிகலன் கழிந்த மன்னவர்
பொதிசெயுந் துறவிடம் போலுஞ் சோலையே
 
முதிர் செயும் கனி மலர் மொய்த்துத் தூங்கலோடு,
உதிர் செயும் பழந் துணர் ஒளி செய் குப்பையால்,
கதிர் செயும் முடி கலன் கழிந்த மன்னவர்
பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே.

     முதிர்ந்த பழங்களும் மலர்களும் மரங்களில் மொய்த்துத் தொங்கிக்
கொண்டிருப்பதோடு, உதிர்ந்த பழங்களும் பூங்கொத்துக்களும் ஒளி செய்து
குவியலாய்த் தரையில் கிடக்கின்றன. அதனால், ஒளி செய்யும்
முடிகளையும், பிற அணிகலன்களையும் கழற்றி நீக்கிய மன்னர்கள்
கூடியிருந்து தவம் செய்யும் துறவறச்சாலை போல் அச்சோலை விளங்கும்.

     முதிர்ந்து தொங்கும் பழங்களும் மலர்களும் துறவு பூண்ட
மன்னர்களுக்கும் உதிர்ந்த பழங்களும் பூங்கொத்துக்களும் அவர்கள்
கழற்றியெறிந்த முடிகள் போன்ற பிற அணிகளுக்கும் உவமை.

               44
வானிறத் தகரினங் கலையின் மானினந்
தூநிறத் துயரிய தூரி யத்தின
நீனிறப் பகட்டின நெடிது ழற்றலிற்
கோனிறச் சிலம்பநற் கூடஞ் சோலையே.
 
வால் நிறத் தகர் இனம், கலையின் மான் இனம்,
தூ நிறத்து உயரிய தூரியத்து இனம்,
நீல் நிறப் பகட்டு இனம் நெடிது உழற்றலின்,
கோன் நிறச் சிலம்ப நல் கூடம் சோலையே.

     வெண்ணிறமான ஆட்டுக் கிடாய்க் கூட்டமும், கலைமான் கூட்டமும்,
தூய நிறத்தோடு உயரமாய் வளர்ந்த பொலிகாளைக் கூட்டமும், கரு நிறத்து
எருமைக் கடாக் கூட்டமும் நெடு நேரம் தம்முள் ஒன்றோடொன்று
போரிட்டுக் கொண்டிருத்தலால், அரசனது புகழ் வாய்ந்த நல்ல சிலம்பக்
கூடம் போல் சோலை விளங்கும்.

     நீல் - 'நீலம்' என்ற சொல்லின் கடைக்குறை.