பக்கம் எண் :

முதற் காண்டம்361

             54
வீட மைந்தன வாழ்வுவி ழுங்கிய
வீட மைந்தன வின்பது வேலைதன்
வீட மைந்ததின் மூழ்கிய வேலையின்
வீட மைந்திலன் வெண்மலர்க் கோலினான்.
 
வீடு அமைந்தன வாழ்வு விழுங்கிய
ஈடு அமைந்தன இன்பு அது வேலை,
தன் வீடு அமைந்து, அதின் மூழ்கிய வேலையின்,
வீடு அமைந்திலன், வெணி மலர்க் கோலினான்.

     வெண்ணிற மலர் நிறைந்த கோலைத் தாங்கிய சூசை, வான் வீட்டில்
அமைந்துள்ள நல்வாழ்வையெல்லாம் விழுங்கிய தன்மை கொண்ட இன்பக்
கடலாகிய ஆண்டவன், தன் சிறு வீட்டினுள் வந்து தங்கப்பெற்று,
அக்கடலில் தானும் மூழ்கிய வேளையில், அதினின்று விடுபடுதல் இன்றி
ஆழ்ந்து கிடந்தான்.

     இது முதலாகத் தொடரும் பாடல்கள் அடிதோறும் முதற்கண்
முதற்சீர்கள் எழுத்தால் ஒத்து வந்து பொருள் வேறுபடுதல் யமகம்
என்னும் சொல்லணி என அறிக.
 
             55
பான கக்கதிர் பானது சூலில்வான்
பான கக்களி யாள்தரப் பார்த்ததாற்
பான கக்களிப் பவ்வமுண் மூழ்கினான்
பான கக்கமழ் பாடலி வாகையான்.
 
பானு அகக் கதிர், பானு அது சூலில்,
வான் பால் நகக் களியாள், தரப் பார்த்ததால்,
பால் நகக் கிளிப் பவ்வம் உள் மூழ்கினான்,
பால் நகக் கமழ் பாடலி வாகையான்.

     பாலையும் பழிக்கத்தக்க வெண்ணிறத்தோடு மணம் கமழும் தேன்
நிறைந்த மலர்க் கொடியைத் தாங்கிய சூசை, வானுலகம் மகிழத் தக்க
களிப்புள்ள மரியாள், தன் வயிற்றில் தேவ ஞாயிறு ஆகிய ஆண்டவனைக்
கொண்டுள்ள கருப்பத்திலிருந்து, பகலவனிடத்துள்ள கதிரொளியை மேலே
பரப்பித் தரப் பார்த்தமையால், அமுதத்தையும் இகழத் தக்க மகிழ்ச்சிக்
கடலினுள் மூழ்கினான்.