பக்கம் எண் :

முதற் காண்டம்362

     சூசை, மேலே பரப்பிய ஒளியைப் பார்த்து மகிழ்ந்தானே யன்றி, அது
உள்ளே கொண்ட சூலினின்று எழுந்ததென அறிந்திலன் என அடுத்த
பாடலால் அறிக.
 
              56
கண்ட கந்தனில் வாழ்ந்துதன் காதலி
கண்ட கந்தகுங் காதை தெரிந்திலான்
கண்ட கன்றக னிடந்தவின் பெய்தலாற்
கண்ட கந்துளி கான்றுக ளித்தனன்
 
கண்டு அகந்தனில் வாழ்ந்து, தன் காதலி
கண்ட அகம் தகும் காதை தெரிந்து இலான்,
கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால்,
கண் தகு அம் துளி கான்று களித்தனன்.

     சூசை அவ்வொளியையே கண்டு உள்ளத்தில் நல்வாழ்வு கொண்டு,
தன் மனைவி கண்டறிந்த உள்ளரங்கமான கதையை அறியாதவனாய்,
கற்கண்டையும் வென்ற கனிவான இன்பம் கொண்டமையால், தன்
கண்களினின்று அவ்வுணர்விற்குத் தகுந்த அழகிய துளிகளைப் பொழிந்து
களித்தான்.

     காதை - கதை : 'செய்தி' என்ற பொருளில் இங்கு நின்றது.
இரண்டாமடியில், கண்ட + அகம் - 'கண்டவகம்' என வர வேண்டியது,
'கண்டகம்' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.
 
               57
கலையின் மேலெழு காற்கவி னாளுடைக்
கலையின் மேலெழு காந்திப ரந்தன
கலையின் மேலெழு குங்களி யோடருங்
கலையின் மேலெழு காட்சிய டைந்துளான்
 
கலையின் மேல் எழு கால் கவினாள் உடைக்
கலையின் மேல் எழு காந்தி பரந்து, அன
கலையின் மேல் எழுகும் களியோடு, அருங்
கலையின் மேல் எழு காட்சி அடைந்து உளான்.