பக்கம் எண் :

முதற் காண்டம்363

     பிறை மதியின்மீது எழுந்து நிற்கும் அழகிய கால்களை உடைய
மரியாள் அணிந்திருந்த ஆடையின் மேல் எழுந்த ஒளியும் பரந்தது.
அதனால் சூசை கணப் பொழுதில் மேலோங்கி எழும் களிப்போடு, அரிய
கலை நூல்களால் அடையும் அறிவினும் மேம்பட்ட ஞானம் அடைந்தவன்
ஆனான்.

     கலை: (1) மதியின் ஒரு நாள் வளர்ச்சி. அது பதினாறும் நிறைவு
பெறுவது முழுமதி. மூன்று கலை நிரம்பிய மூன்றாம் பிறையைச் சிறப்பாகக்
கொள்வது தமிழ் மரபு. (2) ஆடை. (3) கால நுட்பம்: கணப் பொழுது. (4)
கரைநூல். காற் கவினாள் என்பதைக் 'கவின் காலாள்' என மாற்றுக. எழுகும்
- 'எழும்' என்ற சொல் இடையே பகுதியோடு குகரச் சாரியை பெற்றுள்ளது.
 
              58
நாடொ றுங்கரு நன்றுவ ளர்ந்துபொன்
னாடு றுங்கரு ணைப்பொலி நாயகி
நாடு ருங்களி நம்பிகொள் நட்பியல்
நாட ருங்கலை யானவில் வாங்கொலோ.
 
நாள் தொறும் கரு நன்று வளர்ந்து, பொன்
நாடு உறும் கருணைப் பொலி நாயகி
நாடு உறும் களி நம்பி நட்பு இயல்
நாட அருங் கலையால் நவில்வு ஆம் கொலோ?

     நாள்தோறும் அக்கருப்பம் நன்கு வளர்ந்து, அதனால் பொன்னுலகிற்கு
உரிய கருணையோடு பொலிந்து விளங்கிய மனைவியாகிய மரியாளை
மேன்மேலும் நாடும் களிப்புள்ள தலைவனாகிய சூசையின் நட்புத்
தன்மையை,தேடி அடைவதற்குரிய கலைநூல் அறிவாலும் எடுத்துக் கூறுதல்
குமோ?

     ஆங்கொலோ - ஆமோ: 'கொல்' இடையே அசைநிலை. நம்பி
- ஆடவரிற் சிறந்தவன் : தலைவன். நாட + அரும் - 'நாடவரும்' என
வரவேண்டியது, 'நாடரும்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.