பக்கம் எண் :

முதற் காண்டம்365

     மாசில்லாத கருப்பம் உண்டாகி, வளர்ந்து தேயும் மதியினால்
அமையும் மாதங்கள் ஐந்து நிரம்பியமையால், குற்றமற்ற அறநெறி
ஒழுக்கமுள்ள கன்னி மரியாளின் வயிறு உயர்ந்து நிற்கும் அழகுத்
தோற்றத்தை, இகழ்ச்சிக்கு இடமில்லாத தவத்தைத் தாங்கிய சூசை
கண்டு, தான் கண்டடைந்த காட்சி என்றும் வாளினால் ஒளி மங்கும்
தன் நெஞ்சம் அறுக்கப்பட்டது போன்ற துன்பத்தோடு, அதுபற்றிப்
பலவாறான ஐயமும் கொண்டான்.
 
                      61
மணிநிறத் தழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்ன
ரணிநிறப் படலை யாக வறமெலாஞ் சேர்த்த தன்மை
துணிநிறத் தெளிந்தோன் கண்ட தோற்றமீங் காய்ந்த
                                         காலை
பிணிநிறத் துருத்த துன்பம் பெருகியே முற்றிற் றம்மா.
 
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள், முன்னர்
அணி நிறப் படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை
துணி நிறத் தெளிந்தோன், கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த                                            காலை,
பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று, அம்மா!

     மாணிக்கத்தின் நிறமுள்ள அழகிய தோற்றம் வழங்கி நின்ற இளம்
பெண்ணாகிய மரியாள், முன்னெல்லாம் அழகிய நிறமுள்ள மாலை போலப்
புண்ணிய மெல்லாம் தன்னோடு சேரக் கொண்டு விளங்கிய தன்மையைத்
துணிந்த நெஞ்சோடு தெளிய அறிந்திருந்த சூசை, இப்பொழுது தான் கண்ட
தோற்றத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, நோயின் தன்மையில் அவனை
வருத்திய துன்பம் பெருகி முற்றியது,

     அம்மா! 'அம்மா' வியப்பு உணர்த்தும் இடைச் சொல்,
 
                      62
நாள்வளர் பருவத் தஞ்சூல் நன்றுற வளரும் வாய்ந்த
பீள்வளர் பருவத் தெஞ்சாப் பெருந்துயர் வளர்ந்து மிக்காய்
வாள்வளர் புண்ணிற் செந்தீ வைத்தெனத் துயரு மாற்றா
கோள்வளர் புணரி தாழ்ந்து குளித்தநெஞ் சமிழ்ந்து கின்றான்.