பக்கம் எண் :

முதற் காண்டம்368

     ஒருவாறு தேறிய சூசை, கருப்பமெனக் காட்டிய தன் கண்களை
நம்பாமல், "என் கண்களே, நீரும் எனக்குப் பொய்யே சொன்னீர். எந்தக்
குற்றமும் தன்னை அடையாத இயல்புள்ள கன்னி மரியாள், முன் நாளில்
மெய்யாக எனக்குச் சொல்லிய தன்மையினின்று தவறுவாளோ?
பளிங்கைக் காட்டிலும் தூய்மை கொண்ட அவள் மையைப் போலக்
களங்கம் அடைந்து மயங்குவதற்கு முன், கதிரவன் நீட்டும் கை
எனப்படும் அக்கதிர்கள் மாறிக் கலங்குதலை நீரே காண்பீர்" என்றான்.

     முன் அறைந்தது, 6-வது, ஈரறம் பொருத்து படலம், 15-ம், பாடல்
காண்க. கதிர்கள் என்றும் மாறாமை போல், மரியாளும் என்றும் தன்
கன்னிமையிற் பழுது உறாள் என்பது கருத்து.

 
                              66
என்றனன் கருக்கொள் காந்தை யெதிர்வர வெய்த லுற்றா
னின்றனன் விழித்தா னைய நீக்கவு மருகு நண்ணிச்
சென்றனன் கருக்கண் டுற்றான் றேர்ந்துளஞ் சிதைந்தா
                                        னொந்தான்
பின்றனன் பின்றாத் துன்பம் பெற்றழு துரைப்பன் மீண்டே
 
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான்;
நின்றனன்; விழித்தான்; ஐயம் நீக்கவும் அருகு நண்ணிச்
சென்றனன்; கருக் கண்டு உற்றான்; தேர்ந்து உளம்
                             சிதைந்தான்; நொந்தான்
பின்று அனன், பின்றாத் துன்பம் பெற்று, அழுது உரைப்பன்
                             மீண்டே :

     என்று சொல்லிக் கொண்ட அவன் கருக்கொண்ட தன் மனைவி
எதிரே வந்து சேரப் பெற்றான்; நின்று, அவளைக் கூர்ந்து பார்த்தான்;
தன் ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு அருகில்
நெருங்கிச் சென்றான்; அது கருப்பமே என்பதைக் கண்டு கொண்டான்;
அதன் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து மனம் சிதைந்து நொந்தான்.
அங்கு மேலும் நிற்க இயலாமல் பின்னிட்டுச் சென்ற அவன், நீங்காத
துன்பம் கொண்டு, மீண்டும் அழுது பின்வருமாறு சொல்லுவான்: