| 67 |
வான்வளர்
நாத னேவி மணஞ்செய நானே பூத்த
தேன்வளர் வாகை விண்ட செழுமலர் வாடா தோங்க
மீன்வளர் கண்ணி னல்லாள் விளைத்ததன் கன்னி யம்பூக்
கான்வள ரிதழ்கள் வாடிக் காய்ந்ததென் றுணர்தலாமோ. |
| |
"வான் வளர்
நாதன் ஏவி, மணம் செய நானே, பூத்த
தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க,
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைத்த தன் கன்னி அம் பூ
கான் வளர் இதழ்கள் வாடிக் காய்ந்தது என்று உணர்தலாமோ?" |
"வானுலகில்
வீற்றிருக்கும் ஆண்டவன் ஏவலால், நான் மரியாளை
மணம் புரிந்து கொண்ட போது, என் கையில் பூத்த தேன் கொண்ட
மலர்க்கொடியில் புதுமையாக விரிந்த செழுமையான மலர்கள் வாடாமல்
விளங்கவும், மீன் போன்ற கண்களை உடைய நல்லவளாகிய
அம்மரியாள் வளர்த்த தன் கன்னிமை என்னும் அழகிய பூ மணம்
பொருந்திய இதழ்கள் வாடிக் காய்ந்தது என்று கருதவுங் கூடுமோ?
| 68 |
புண்செயும்
வைவாள் செய்த புண்டனை யாற்றுந் தன்மை
கண்செயுங் காட்சி காட்டுங் கருவுளங் கிழித்துக் காட்டும்
பண்செயு மொழியாள் மாட்சி பற்றிய துயர்க ளாற்ற
வெண்செயு முணர்வி லிங்க ணியா துமெய் யென்ப தம்மா |
| |
"புண்செயும் வைவாள்,
செய்த புண்தனை ஆற்றும் தன்மை,
கண்செயும் காட்சி காட்டும் கரு உளம் கிழித்து, காட்டும்
பண்செயும் மொழியாள் மாட்சி பற்றிய துயர்கள் ஆற்ற,
எண்செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது, அம்மா!" |
"முன்பு புண்ணை
உண்டாக்கும் கூர்மையான வாள், தான் செய்த
புண்ணைப் பின்பு தானே ஆறச் செய்யும் தன்மைபோல, என் கண்கள்
தரும் காட்சி முன்பு மரியாளிடம் காட்டும் கருப்பம் என் உள்ளத்தைக்
கிழிக்கும்; அதே கண்கள் கனவு காட்டும் யாழ் போலும் சொல்லை
உடைய மரியாளின் மாண்பு. முன்பு என்னைப் பற்றிக்கொண்ட துயர்களை
ஆறச் செய்யும். |