பக்கம் எண் :

முதற் காண்டம்370

இவ்வாறிருக்கவே, இரண்டையும் எண்ணிப் பார்க்கும் உணர்வில் இங்கு
எதனை உண்மை என்பது, அம்மா ! -

     'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்
நோய் உளன்போல்' என்று வரும் 'திருவாய்மொழியில், வாளால்
அறுத்துப் புண்ணை ஆற்றும் பண்டை வழக்கம் கண்டுணர்க.

     இங்கண் + யாது - இங்கணி யாது; மெய்யின் முன் யகரம் இகரம்
பெற்றுப் புணர்ந்தது.

 
                              69
நீர்விளை கடலோ டொத்த நெஞ்சலைந் துருகப் பின்றாச்
சூர்விளை காட்சி தந்து துறந்துயர் தந்த கண்ணே
யேர்விளை யிரவி நோக்கா திருளடைந் தரற்றி யெஞ்சாக்
கார்விளை தாரை யொப்பக் கலுழ்ந்தினி வருந்த தீரே.
 
"நீர்விளை கடலோடு ஒத்த நெஞ்சு அலைந்து உருக, பின்றாச்
சூர்விளை காட்சி தந்து, துறும் துயர் தந்த கண்ணே,
ஏர்விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி, எஞ்சாக்
கார்விளை தாரை ஒப்பக் கலுழ்ந்து இனி வருந்துதீரே!"

     "நீர் நிறைந்த கடலுக்கு ஒப்பான என் நெஞ்சம் அலைந்து
உருகுமாறு, நீங்காத துன்பம் விளைவிக்கும் காட்சியைக் காணத் தந்து,
அதன் மூலம் எனக்கு நிறைந்த துன்பம் தந்த கண்களே, இனி நீங்கள்
அழகு நிறைந்த பகலவனைப் பாராமல் இருள் அடைந்து புலம்பி,
விடாத மழையால் ஏற்படும் நீர்த் தாரைகள் போல அழுது
வருந்துவீர்களாக!"

 
                            70
இருளற வுணர்விற் றேர்ந்த விருந்திறத் தரசர் கோவே
தெருளற வுணர்ந்த வையஞ் செய்தநோ யினிநீத் துற்ற
மருளற வுணராய் கொல்லோ மணஞ்செயப் பணிசெய் தன்றே
யருளற வருத்துந் தன்மை யதன்பய னெனவோர்ந் தாயோ.