பக்கம் எண் :

முதற் காண்டம்379

                  சூசையின் முடிபு
 
               84
கண்ணலா ளுரைத்தசொற் காதி னுட்புகப்
புண்ணளாம் பெரும்புழை புகுந்த தீயெனா
வெண்ணலா லருந்துய ரெய்திச் சூசையுண்
ணண்ணலாந் தழல்பொறா பிரித னாடினான
 
கண் நலாள் உரைத்த சொல், காதின் உள்புக,
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா,
எண்ணலால் அருந்துயர் எய்திச் சூசை, உள்
நண்ணல் ஆம் தழல் பொறா, பிரிதல் நாடினான்.

     தனக்குக் கண்போல் நல்லவளாகிய மரியாள் உரைத்த இச்சொல்,
மேலே புண்ணாய்ப் பரந்த பெரிய துளையினுள்ளே புகுந்த நெருப்பைப்
போலத் தன் காதினுள் புகவும், அதனை ஆழ்ந்து எண்ணுதலால் சூசை
அரிய துயரம் அடைந்து, தன் உள்ளத்தில் பொருந்திய அந்நெருப்பைத்
தாங்கமாட்டாமல், அவளை விட்டுப் பிரிதலை விரும்பினான்.
 
               85
காசடை கடலெழுங் கமலங் காலினாற்
பாசடை தளம்பிய பான்மை பாசறை
யாசடை பொழுதரி தமைந்த காட்சியாற்
றேசடை யுளத்தையுஞ் சிதைப்ப தாமரோ.
 
காசு அடை கடல் எழும் கமலம் காலினால்
பாசு அடை தளம்பிய பான்மை, பாசறை
ஆசு அடை பொழுது, அரிது அமைந்த காட்சியால்
தேசு அடை உளத்தையும் சிதைப்பது ஆம் அரோ.

     மணிகள் நிறைந்த கடலில் நிமிர்ந்து நிற்கும் தாமரையும் காற்றினால்
தன் பசுமையான இலைகளோடு அசைந்தாடிய தன்மைபோல், துன்பம்
என்னும் குறை ஒருவனை வந்து அடையும் பொழுது, அரிதாக
அமையப்பெற்ற ஞானத்தால் ஒளி ஒளிகொண்ட உள்ளத்தையும் சிதைக்கக்
கூடியதாகி விடும்.

     'அரோ' அசைநிலை. 'உளத்தையும்' என உவமேயத்து அமைந்த
சிறப்பும்மையை உவமானத்தில் தொக்கதாகக் கொண்டு, 'கமலமும்' என
விரித்துக் கொள்க. 'கடல் எழும் கமலம்' இல்பொருள் உவமை. பாசடை
- பசுமை + அடை: பசுமையான இலை.