பக்கம் எண் :

முதற் காண்டம்383

     பிரிந்த + உளி - 'பிரிந்தவுளி' என வரவேண்டியது, 'பிரிந்துளி' எனத்
தொகுத்தல் விகாரமாய் நின்றது. ஏனைய அடிகளிலும் முதற்கண் இவ்விகாரம்
அமைந்துள்ளமை காண்க. நீக்குப - நீக்க: 'செய்' என்னும் வாய்பாடு
இடைநிலையின்றியே காலங் காட்டுமாயினும், முனிவர் எதிர்கால இடைநிலை
தந்து இச்சொல்லை அமைத்துள்ளார்.
 
                  91
பிரிவரு மன்பினர் பிரியுங் காலுறும்
புரிவருந் துயர்கள்கண் ணுறல்பொ றாதொளித்
தெரிவரும் பருதிபோ யைய மெய்தினோன்
முரிவருஞ் சிந்தைபோ லிருளு மொய்த்ததே.
 
பிரிவு அரும் அன்பினர் பிரியுங் கால் உறும்
புரிவு அருந் துயர்கள் கண் உறல் பொறாது, ஒளித்து
எரி வரும் பருதி போய், ஐயம் எய்தினோன்
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே.

     பிரிதலே இல்லாத அன்பு கொண்ட இவ்விருவரும் பிரியும் வேளையில்
அடையக் கூடிய ஆசை மேலிட்ட அரிய துயரங்கள் தன் கண்ணில்
படுதலைப் பொறுக்க இயலாமல், நெருப்புப்போல் வரும் கதிரவன் ஒளித்துப்
போகவே, ஐயம் அடைந்துள்ள சூசையின் ஒடிந்துகொண்டிருக்கும்
சிந்தனைபோல் உலகமெங்கும் இருள் மூடிக்கொண்டது.

     இயல்பாக மாலையில் மறையும் கதிரவன், இவ்விருவரின் துயர்
காணப் பொறாது ஒளித்தானெனப் புலவர் தம் கருத்தை ஏற்றிக் கூறியது
தற்குறிப்பேற்றவணி என அறிக. சிந்தனையில் இருள் மொய்த்ததுபோல்
உலகெங்கும் இருள் மொய்த்தது என உவமையை விரிக்க. முதற்கண்
அருமை, 'இன்மை' சுட்டியது.