குறை இல்லாமல்
குற்றம் எல்லாவற்றையும் அறுத்தொழித்த சிறந்த
பெண்ணாகிய மரியாள், தன் கணவன் கருதிய எல்லா நினைவுகளையும்
கண்டறிந்த உணர்வினால், தன்னைத் துன்பம் தணித்து உதவிய சிறந்த
துணைவன் பிரிந்து போனால், தனக்கு நேரக்கூடியதாகக் கணித்த பெருந்
துயரத்தால் அழுது பின்வருமாறு புலம்பினாள்.
94 |
தாய்பெறுந்
தனையனை மறந்த தன்மையா
னீய்பெறு மன்பருள் நிகழ்த்தி லாயையா
தீய்பெறும் வளைத்தவில் நிமிருஞ் சீர்மையா
னோய்பெறுங் கருத்தற நுதலிற் றீததோ. |
|
"தாய் பெறும்
தனயனை மறந்த தன்மையால்,
நீய் பெறும் அன்பு அருள் நிகழ்த்திலாய், ஐயா!
தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால்,
நோய் பெறும் கருத்து அற நுதலின், தீது அதோ? |
"ஐயனே, பெற்ற
மகனைத் தாய் மறந்த தன்மை போல, நீ இயல்பாகக்
கொண்டுள்ள அன்பு கலந்த கருணையை எனக்குச் செய்யாதிருந்தாய். தீயை
அணுகும் வளைத்த வில் நிமிரும் தன்மை போல், துன்பம் அடையும் மனம்
பின் அத்துன்பத்தினின்று விடுபடுமாறு நீயே கருதிச் செய்தால், அது
தீயதாகுமோ?
ஒருமுகமாய்த்
தீயில் வாட்டிய மூங்கில் வில்லாய் வளைந்து, பின்
எதிர்முகமாய் வாட்ட நிமிர்வது போல, இறைவன் ஒரு முகமாய்த் தான்
தந்த துன்பத்தைத் தானே மறுமுகமாய்த் தீர்த்தல் வேண்டும் என்பது
கருத்து. நீ, தீ என்பன எதுகை ஓசைப் பொருட்டு, நீய், தீய் என நின்றன,
'தீது அதோ' என்பதனை, 'அது தீதோ' என மாற்றிக் கொள்க.
95 |
வளம்படு வென்வயின்
வைகு நாதனே
யிளம்படு பேதையான் தனிக்கி லீடிதோ
வுளம்படு துயரறிந் துறுதி செய்கெனா
வளம்படு விழிசிவந் தழுது வேண்டினாள். |
|