பக்கம் எண் :

முதற் காண்டம்386

"வளம் படு என் வயின் வைகும் நாதனே
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ?
உளம் படு துயர் அறிந்து உறுதி செய்க" எனா
அளம் படு விழி சிவந்து அழுது வேண்டினாள்.

     "உன்னால் வளம் பெற்ற என்னிடம் கருப்பமாய்த் தங்கியிருக்கும்
ஆண்டவனே, இளமை கொண்ட பேதைப் பெண்ணாகிய நான் தனிப்பட
நேர்ந்தால், இது பெருமைக்கு உரியதோ? எனவே, எனது உள்ளம் படும்
துயரத்தை அறிந்து, அது உறுதி பெறுவதற்கு வேண்டியதைச் செய்வாயாக"
என்று கூர்மை பொருந்திய தன் கண்கள் சிவக்க அழுது வேண்டினாள்.  

     'ஈடு இதோ' என்பதனை, 'இது ஈடோ' என மாற்றுக. செய்க +
எனா - 'செய்க வெனா' என வர வேண்டியது, 'செய்கெனா' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது.  

 
               96
எள்ளருங் குணத்திறை யிரக்க மீதுறீஇ
யுள்ளருந் துயரினா லுறுதி யாமெனத்
தெள்ளரு மிருவருக் கிடர்செய் தேனினித்
தள்ளருந் துனியறத் தயைசெய் வேனென்றான்.
 
எள் அருங்குணத்து இறை இரக்கம் மீது உறீஇ,
"உள் அருந் துயரினால் உறுதி ஆம் எனத்
தெள் அரும் இருவருக்கு இடர் செய்தேன். இனி,
தள் அருந் துனி அறத் தயை செய்வேன்" என்றான்.

     இகழ்ச்சிக்கு இடமில்லாத நற்குணம் கொண்ட இறைவன் அவ்விருவர்
மீதும் இரக்கங் கொண்டு, "அரிய இத்துயரினால் மனவுறுதி ஏற்படுமென்று
இவ்விருவருக்கும் தெளிவதற்கு அரிய இத்துன்பத்தைச் செய்தேன். இனி,
தாமே போக்குவதற்கு அரிய இத்துன்பம் நீங்குமாறு அருள் செய்வேன்"
என்று கூறினான்.  

     'கூறினான்' என்றாரேனும், 'திருவுளங் கொண்டான்' என்பதே
கருத்தாகக் கொள்க. 'சுடச் சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு" என்ற குறளுக்கு (267) ஏற்ப, துன்பத்தைப்
பொறுமையாய்த் தாங்குவோர்க்குப் புண்ணியமும் மனவுறுதியும் ஒருங்கே
வாய்க்கும்.