3 |
வையத்தார்
வானகத்தார் வணங்குகின்ற வரம்பெற்ற மதிவல்
லோனே
யையத்தா லகத்தலக்கண் ணுழைந்தறுப்ப வலைவானே
னழிவில் கன்னி
பொய்யற்றா ரணத்தோரும் புகன்றபடி பெறுவளெனப்
பொருவில் வாய்ந்த
மெய்யைத்தா னறியாயோ விரையுயிர்க்கு மலர்வாடா விருது
நல்லோய். |
|
"வையத்தார்
வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி
வல்லோனே,
ஐயத்தால் அகத்து அலக்கண் நுழைந்து அறுப்ப அலைவான்
ஏன்? 'அழிவு இல் கன்னி,
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி, பெறுவள்' என்
அப்பொருவு இல் வாய்ந்த
மய்யைத் தான் அறியாயோ, விரை உயிர்க்கும் மலர் வாடா
விருது நல்லோய்? |
"மண்ணுலகத்தாரும்
விண்ணுலகத்தாரும் வணங்கும்படியான வரம்
பெற்றுள்ள அறிவில் வல்லவனே, கொண்ட ஐயத்தினால் மனத்தில் துன்பம்
நுழைந்து வாள்போல் அறுக்க அலைதல் ஏன்? மணம் பரப்பும் மலர்கள்
வாடாத கொடியைத் தாங்கிய நல்லவனே, வேத நூலோரும் பொய்யற்ற
தன்மையாய் அறிவித்துள்ளபடி, 'அழிவில்லாத கன்னி மகனைப் பெறுவாள்'
என்ற அந்த ஒப்பற்ற விதமாய் வாய்க்கக்கூடிய மெய்யை நீயும் தான்
அறியமாட்டாயோ?"
அழிவு இல் கன்னி
பெறுவள்: 5:22 அடிக்குறிப்பு நோக்குக. 'விரை
உயிர்க்கும் மலர்வாடா விருது நல்லோய்,' என்பது, அது வாடாமையே
மரியாள் பழுதுற்றிலள் என்பதைத் தெரிவிக்கும் என்ற கருத்தை
உட்கொண்டிருத்தலின், கருத்துடை அடை கொளி அணியாம்.
|