4 |
நேர்விளைந்த
நீதிபர னெடுங்காலத் துணர்ந்ததயை நிகழ்த்துங்
காலாய்ச்
சீர்விளைந்த நின்மனைக்கண் கன்னியறா தான்மகனாய்த் திங்க
ளேழாஞ்
சூர்விளைந்த பிணியின்றிச் சூற்கன்னி பெறுந்தேவத் தோன்றல்
தானே
பார்விளைந்த துகடீர்ப்பா னெனவியேசு வெனுநாமம் பகர்வா
யென்றான். |
|
நேர் விளைந்த
நீதி பரன் நெடுங் காலத்து உணர்ந்த தயை
நிகழ்த்தும் கால் ஆய்,
சீர் விளைந்த நின் மனைக் கண் கன்னி அறா தான் மகன் ஆய்த்
திங்கள் ஏழு ஆம்.
சூர் விளைந்த பிணி இன்றிச் சூல் கன்னி பெறும் தேவத் தோன்றல்
தானே
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என, இயேசு எனும் நாமம்
பகர்வாய்" என்றான். |
"என்றும்
நேராய் அமைந்த நீதியுள்ள கடவுள் நெடுங்காலமாய்ச் செய்ய
நினைத்திருந்த கருணையைச் செய்வதற்குரிய காலம் அடுத்துவரவே, சிறப்பு
நிறைந்த உன் இல்லத்தில் தாயின் கன்னிமைக்குப் பழுதின்றி மனிதனாய்
அவதரித்து இது ஏழாம் மாதம் ஆகும். கருப்பம் கொண்ட அக்கன்னி
துன்பம் பொருந்திய நோவு ஒன்றுமின்றிப் பெறும் தெய்வ மகன் தான்
இவ்வுலகில் விளைந்துள்ள பாவங்களைத் தீர்ப்பான் என்ற காரணத்தால்,
இயேசு என்னும் பெயரிட்டு அவனை அழைப்பாய்" என்றான் கபிரியேல்.
'இயேசு' என்ற
பெயருக்கு 'மீட்பர்' என்பது பொருள். இந் நிகழ்ச்சி
பற்றிய விவரம், மத்தேயு 1 : 20 - 25 காண்க.
|