பக்கம் எண் :

முதற் காண்டம்392

                    5
அலை புறங்கா ணயிர்ப் பகத்தோ னையெனக்கண்
                        விழித்தொளிசூ ழன்றி மற்றோர்
நிலைபுறங்காண் கிலன்களியும் வெருவுமுறீஇக் கடிதெழுந்தா
                                னிறைநூல் தந்த
கலைபுறங்கா ணறிவோங்கிக் கணிக்கரிய தன்மையின்றூய்
                                கன்னி மாறா
விலைபுறங்காண் மணியெனத்தன் மனைமகனா மெந்தைதொழ
                                விரும்பி வீழ்ந்தான்.
 
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ எனக் கண் விழித்து,
                         ஒளி சூழ் அன்றி மற்று ஓர்
நிலை புறம் காண்கிலன், களியும் வெருவும் உறீஇக் கடிது
                         எழுந்தான்; நிறைநூல் தந்த
கலை புறம் காண் அறிவு ஓங்கி, கணிக்க அரிய தன்மையின், தூய்
                         கன்னி மாறா,
விலை புறம் காண் மணி எனத் தன் மனை மகன் ஆம் எந்தை
                         தொழ விரும்பி வீழ்ந்தான்.

     கடல் அலையையும் வெல்லத் தக்க ஐயம் கொண்ட மனத்தோனாகிய
சூசை விரைவாகக் கண் விழித்து, சூழ்ந்து கண்ட ஒளியேயன்றி, களவிற்
கண்ட வேறு எந்நிலையும் வெளிப்படக் காணாதவனாய், மகிழ்ச்சியும்
அச்சமும் ஒருங்கே கொண்டு விரைந்து எழுந்தான்; நிறைவான நூல்கள்
தந்த கலைகளையெல்லாம் வெல்லத் தக்க அறிவு ஓங்கப் பெற்று, கணிக்க
இயலாத விதமாகவும், தாயின் தூய கன்னிமை பழுதுறா வகையிலும்,
எவ்விலையையும் வெல்லக் கூடிய மாணிக்கம் போல் தன் இல்லத்தில்
மகனாய் அவதரித்துள்ள கடவுளைத் தொழ விரும்பித் தரையில் வீழ்ந்தான்.

     கணிக்கரிய-'கணிக்கவரிய' என்ற தொடரின் தொகுத்தல் விகாரம்.