பக்கம் எண் :

முதற் காண்டம்393

                கனிந்த சூசை கடவுளைப் போற்றல்
 
                       6
சாலரும்புச் சூலணிந்த சண்பகத்தண் சினைகடொறுந் தவறுந்
                                    தென்றற்
காலரும்பத் தாதரும்பிக் கடிமலர்தே னோடரும்புங் கந்த
                                    மென்னா
வாலரும்பு வாயரும்ப வரும்பரும்பூ வாகையினான் மகிழ
                                    வானோர்
நூலரும்ப வாயரும்பிச் சுருதிமதுப் பொழியுமுரை நுதலிச்
                                    சொல்வான்:
 
சால் அரும்புச் சூல் அணிந்த சண்பகத் தண் சினைகள் தொறும்,
                                    தவறும் தென்றற்
கால் அரும்ப, தாது அரும்பிக் கடி மலர் தேனோடு அரும்பும்
                                    கந்தம் என்னா,
வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ வாகையினான்,
                                    மகிழ வானோர்,
நூல் அரும்ப வாய் அரும்பி, சுருதி மதுப் பொழியும் உரை நுதலிச்
                                    சொல்வான்:

     நிறைந்த அரும்புகளைக் கருப்பமாக அணிந்து நின்ற சண்பக மரத்தின்
குளிர்ந்த கிளை தோறும், காலம் தவறி வீசும் தென்றற் காற்று வந்து வீசுவே,
அவ்வரும்புகளெல்லாம் மகரந்தம் பிடித்துப் புது மலர்களாய்த் தேனோடு
விரிந்து பரப்பும் மணம் போல வெண்ணிற அரும்புகளின் வாய் விரிந்து
மலரும் அரிய மலர்க் கொடியை உடையவனாகிய சூசை, வானவர்களும்
மகிழுமாறு, கற்ற நூல் அறிவு புலப்படத் தன் வாய் திறந்து, வேத
அறிவென்னும் தேனைப் பொழியும் சொற்களை ஆராய்ந்து பின் வருவாறு
சொல்வான்:

     தவறும் தென்றல் - தனக்கு உரிய இளவேனிற் காலந் தவறி வீசும்
தென்றல். இங்கு, அக்காலத்திற்கு முந்திக்கொண்ட தென்றல். தக்க காலத்தில்
ஆண்டவன் தனக்கு அருள் செய்வானென்ற நம்பிக்கை தளராத சூசை,
இவ்வளவு விரைவில் அவன் அருளிய தன்மையைக் காலத்திற்கு முந்திக்
கொண்டு வீசிய தென்றலோடு ஒப்பிட்டு இன்பம் காண்கின்றான்.