பக்கம் எண் :

முதற் காண்டம்394

                    7

எல்லோடு மொளிபெருகா திரவொடிருட் படாதெங்கு
                          மிலங்குஞ் சோதி
சொல்லோடு முணர்வின்றிச் சூழ்ந்தவெலாக் கலைவல்லோய்
                          தொழுந்தொ ழும்பன்
புல்லோடும் புன்மையறி யாதென்னோ வித்திறத்திற் பொலியச்
                          செய்தாய்
சொல்லோடும் வான்வியப்பச் சிறுமையெடுத் தடல்காட்டுந்
                          திறலின் மிக்கோய்.

 
"எல்லோடும் ஒளி பெருகாது, இரவொடு இருள் படாது, எங்கும்
                               இலங்கும் சோதி!
சொல்லோடும் உணர்வு இன்றி, சூழ்ந்த எலாக் கலை வல்லோய்!
                               தொழும் தொழும்பன்
புல்லோடும் புன்மை அறியாது, என்னோ இத்திறத்தில் பொலியச்
                               செய்தாய்!
செல் ஓடும் வான் வியப்ப, சிறுமை எடுத்து அடல் காட்டும்
                               திறலின் மிக்கோய்!"

     "பிற ஒளிகளால் தன் ஒளி பெருகாமலும், இரவால் தான் இருள்
அடையாமலும், இவ்விடம் என்றில்லாது எவ்விடத்தும் தன்னியல்பாகவே
விளங்கித் தோன்றும் பேரொளியே! பிறர் சொல்வதனால் உணர்தலென்று
இல்லாமல், பிறரெல்லாம் ஆராய்ந்து காணக் கூடிய எல்லாக் கலைகளிலும்
தன்னியல்பாகவே வல்லவனே! மேகங்கள் தவழும் வானுலகத்தவரும்
வியக்குமாறு, அற்பமானதை எடுத்துக் கொண்டு அதன் மூலம் உன்
வல்லமையைக் காட்டும் திறமை மிக்கவனே! உன்னைத் தொழும்
அடியவனாகிய எனது, புல்லைக் காட்டிலும் அற்பமான கீழ்மையைக்
கருதாமல், இத்தகைய மேன்மையோடு என்னை விளங்கச் செய்தது
எத்தகைய கருணை என்பதோ!"

     சூசை தன்னை அற்பத்திலும் அற்பமாக மதிப்பதனால், தனக்கு
வாய்ந்த மேன்மையைக் கண்டு வியக்கிறான். 'இத்திறம்' என்றது,
கன்னித்தாய்க்குத் தான் இல்லறத் துணைவனாகவும், அவளிடமாய்
அவதரிக்கும் கடவுளுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் அமைந்த
மேன்மையைக் கருதியது.