பக்கம் எண் :

முதற் காண்டம்395

                      8
பாராழி யுரைகொண்டே படைத்தாயோர் குறுஞ்சூரற் பயனைக்
                                 கொண்டே
நீராழி வழிவகுத்தாய் நெடும்படையோன் பணிக்கொண்டே
                                 நில்லா வான்மீ
தூராழி நிறுத்தினையே யொத்ததிறத் தின்றுலக முய்தற் கன்பின்
பேராழி கடக்கவுநீ தொழும்பனெனைத் துணைக்கொண்டாய்
                             பெயராச் செல்வோய்.
 
"பார் ஆழி உரை கொண்டே படைத்தாய்; ஓர் குறுஞ் சூரல் பயனைக்
                                   கொண்டே
நீர் ஆழி வழி வகுத்தாய்; நெடும் படையோன் பணிக் கொண்டே,
                                   நில்லா வான் மீது
ஊர் ஆழி நிறுத்தினையே: ஒத்த திறத்து, இன்று உலகம் உய்தற்கு
                                   அன்பின்
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனைத் துணைக் கொண்டாய்,
                                   பெயராச் செல்வோய்!

     "நீங்காத செல்வம் படைத்த ஆண்டவனே, உலகத்தையும் கடலையும்
உன் உரை கொண்டே படைத்தாய்; ஒரு குறுகிய பிரம்பின் பயனைக்
கொண்டே நீர் நிறைந்த கடலினிடையே வழி ஏற்படுத்தினாய்; நெடிய
படையைக் கொண்டுள்ள சோசுவனின் கட்டளைக்கு இணங்க, நில்லாமல்
வானத்தில் ஊர்ந்து செல்லும் பகலவனின் சக்கரத்தை நிறுத்தினாய்;
இவற்றிற்கு ஒத்த தன்மையாய், இன்று இவ்வுலகம் மீட்பு அடையும்
பொருட்டு அன்பு என்னும் பெருங்கடலைக் கடக்கவும் உன்
அடியவனாகிய என்னை நீ துணையாகக் கொண்டாய்.

     உலகத்தை உரையாற் படைத்தது: ப, ஏ., ஆதியாகமம், 1 : 1 - 25
காண்க. பிரம்பைக் கொண்டு கடலில் வழி வகுத்தது: எசித்து நாட்டினின்று
வெளியேறிய இசுரவேலர் எசித்தியர் கையில் சிக்காதவாறு செங்கடலைக்
கடந்து செல்ல மோயிசன் கையில் இருந்த பிரம்பால் வழி வகுத்துக்
கொடுத்தது: ப. ஏ. யாத்திராகமம், 14 : 5 - 31; தேம்பாவணி, 14 : 21 - 71
காண்க. பகலவனை நிறுத்தியது: எருசலேம் மன்னனும் அவனுக்குத் துணை
நின்ற நால்வரும் இசுரவேலரொடு செய்த போரை ஒரே நாளில் முடிக்குமாறு
பகல் நீடிக்க வேண்டிச் சோசுவன் கட்டளையிட்டுக் கதிரவனை நிறுத்தியது.
ப. ஏ., யோசுவா, 10 : 1 - 15 : தேம்பாவணி, 15 : 27 - 174 காண்க.