பக்கம் எண் :

முதற் காண்டம்396

                       9
என்பென்போ டடிபடக்கின் னரத்தோதை யடிபடச்சே ரினத்தி
                               னங்க
ளன்பன்போ டிசைபடநேர் நரம்போடி வளர்தசைமீ ததளும்
                               போர்த்த
பின்பின்போ டுயிர்படவே பெயர்ந்தெழமுன் னிசேக்கியல்காண்
                               பெற்றி யென்னா
முன்பென்போ டொன்றுபடக் கிடந்தனனா னுயிர்படவிம்
                               முயல்கொண் டாயோ.
 
"என்பு என்போடு அடிபடக் கின்னரத்து ஓதை அடிபட, சேர்
                                இனத்து இனங்கள்
அன்பு அன்போடு இசைபட, நேர் நரம்பு ஓடி, வளர் தசை மீது
                                அதளும் போர்த்த
பின்பு, இன்போடு உயிர் படவே, பெயர்ந்து எழ முன் இசேக்கியல்
                                கான் பெற்றி என்னா,
முன்பு என்போடு ஒன்று படக் கிடந்தனன் நான் உயிர்பட இம்
                                முயல் கொண்டாயோ?

     "எலும்புகள் எலும்புகளோடு தாமாகவே மோதுதலினால் கின்னரத்தின்
ஓசை தோன்றவும், அவ்வெலும்புகள் இசைவாகச் சேரக் கூடிய இனத்து
எலும்புகளோடு இனம் இனமாகத் தமக்குள் அன்பு கொண்டாற் போல்
சேர்ந்து கூடவும், அவ் வெலும்புக் கூட்டின்மீது நேராக நரம்புகள் ஓடி,
மேலே வளர்ந்த தசையின் மீது தோலும் பொருந்தி மூடிய பின்பு,
அவ்வுடலில் இன்பத்தோடு உயிர் வந்து பொருந்தவே, உயிர் பெற்ற
உடல்கள் எழுந்து நடக்கவும் முன் இசக்கியேல் என்ற இறைவாக்குநர்
கண்ட தன்மை போல, முன்பு ஐயத்தால் எலும்புக்கு ஒப்பாகக்
கிடந்தவனாகிய நான் உயிர் பெற்று எழுமாறு இம்முயற்சியை
மேற்கொண்டாயோ?

     இசேக்கியல் கண்ட காட்சி: எலும்புகள் கிடந்த பள்ளத்தில் கடவுள்
இசேக்கியலைக் கொண்டு போய், அவை ஒன்றுகூடி உடலும் உயிரும் பெற்று
எழச் செய்து, அதன்மூலம் இசுரவேலர் பெறும் நல்வாழ்வைக் குறிப்பாகக்
காட்டிய காட்சி. இதன் விரிவு ப. ஏ., எசேக்கியேல், 37 : 1-14 காண்க.