பக்கம் எண் :

முதற் காண்டம்397

                     10
தெவ்வினகத் தூனுண்டு தீயுமிழ்மால் கரியினுமுட் டிறன்சு
                               தீத்தை
நவ்வியகத் துரன்விஞ்ச நாற்கடலம் படைத்தலைவ னவிர்ச்சி
                               ரத்தை
வவ்வியகத் துணிவெய்தி வாளாலிற் றதுகேட்டுன் வலிபு
                               கழ்ந்தேன்
குவ்வினகத் தெனையுயர்த்த குணங்கண்டே யினியியாது
                               கூறு கிற்பேன்.
 
"தெவ்வின் அகத்து ஊன் உண்டு, தீ உமிழ் மால் கரியினும் உள்
                                    திறன் சுதீத்தை,
நவ்வி அகத்து உரன் விஞ்ச, நால் கடல் அம் படைத் தலைவன்
                                    நவிர்ச் சிரத்தை
வவ்வி, அகத் துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு, உன் வலி
                                    புகழ்ந்தேன்.
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது
                                    கூறுகிற்பேன்?

     "பகைவர் மார்பின் ஊனை உண்ட தன்மையாய்க் கொம்பாற் கோதிக்
கிழித்து, சினத்தால் கண்ணினின்று தீயை உமிழும் மத மயக்கம் கொண்ட
யானையைக் காட்டிலும் மன வலிமை படைத்த சுதீத்தை என்பவள், தன்
அழகும் மன வலிமையும் ஒன்றையொன்று விஞ்சிய தன்மையாய், கடல்
போன்ற அழகிய நால்வகைப் படைகட்குத் தலைவனாகிய ஒலுபேரினன்
என்பானது குடுமித் தலையைப் பற்றிப் பிடித்து, மனத் துணிவு கொண்டு
வாளால் அறுத்த செய்தியைக் கேட்டறிந்து, உன் வலிமையைப் புகழ்ந்தேன்.
இப்பொழுது, இவ்வுலகில் என்னை இவ்வாறு உயர்த்தியுள்ள உன் குணத்தைக்
கண்ட பின், இனி யாது கூற வல்லேன்?

     'இற்றது' என்ற தன்வினை 'இறுத்தது' என்ற பிறவினைப் பொருளில்
நின்றது. சுதீத்தை படைத் தலைவன் தலையை வாளால் அறுத்தது: அசீரிய
மன்னனையும் அவன் தெய்வங்களையும் வணங்குமாறு இசுரவேலரைப்
பணிவிக்கப் பெத்தூலிய நகர் மீது படை கொண்டு வந்த ஒலுபேரினன் என்ற
தலைவனைச் சுதீத்தை தன் அழகால் மயக்கி, மதுவுண்டு மயங்கிய நிலையில்
அவன் தலையைக் கொய்து கொணர்ந்த நிகழ்ச்சி. விவரம் ப. ஏ., யூதித்,
12 : 10 - 20; 13 : 1 - 10 காண்க.