பக்கம் எண் :

முதற் காண்டம்40

                47
காலெடுத் தடுத்தெதிர்த் துக்க லாபநீள்
வாலெடுத் துப்பக மாற மஞ்ஞைகள்
கோலெடுத் தஞ்சனக் கோலக் காருகம்
மேலெடுத் தாரியக் கூத்து வீக்குமால்.
 
கால் எடுத்து, அடுத்து, எதிர்த்து, கலாப நீள்
வால் எடுத்து, பக மாற மஞ்ஞைகள்,
கோல் எடுத்து அஞ்சனக் கோலக் காருகம்,
மேல் எடுத்து ஆரியக் கூத்து வீக்கும் ஆல்.

     மயில்கள் காலைத் தூக்கியும், பிற மயில்களை அடுத்து நின்றும்,
எதிர்த் திசையில் திரும்பிச் சென்றும், தோகையாகிய நீண்ட வாலைத்
தூக்கி விரித்தும் அழகாக மாறி மாறி ஆடிக் கொண்டிருக்கும். மை
போன்ற நிறமுள்ள கருங் குரங்குகள் அதனைக் கண்டு கோல்களைக்
கையில் எடுத்துக் கொண்டும். மரங்களின்மேல் ஏறி நின்றும் ஆரியக்
கூத்தைச் சிறப்பாக ஆடிக்காட்டும்.

     'ஆல்' அசைநிலை.
 
                48
கூடநின் றோடைதன் குவளைக் கண்டிறந்
தோடநின் றலைந்தலைந் தொருமித் தோரிடம்
நாடலி னகைத்தென நனைத்த முல்லைநீ
டாடலி னாவித்தென் றலர்ந்த காந்தளே.
 
கூட நின்று ஓடை, தன் குவளைக் கண் திறந்து,
ஓட நின்று, அலைந்து அலைந்து, ஒருமித்து ஓர் இடம்
நாடலின், நகைத்து என நனைத்த முல்லை - நீடு
ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே.

     சோலையை அடுத்த நீரோடை அக்காட்சியைக் கூடநின்று காண
விரும்பியது; தன் குவளை மலர்களாகிய கண்களைத் திறந்தது; ஓடிச் சென்று
காண விரும்பியும் ஓட இயலாமல் நின்றது; அலைந்து அலைந்து வருந்தியது;
பின் ஒருமித்து ஓர் இடத்தையே குறிப்பாக நாடி, அங்கு நின்று காண
முடியாமல் நலிந்தது. நீரோடையின் அறியாமையைக் கண்டு நகைத்தாற்போல்
முல்லைகள் மலர்ந்தன. நெடுநேரம் ஆடல் நிகழ்ந்தமையால் சலித்துப்போய்க்
கொட்டாவி விட்டாற்போல் கார்த்திகைப் பூக்கள் மலர்ந்தன.