21 |
மடன்மடு
வழிந்ததேன் வாகை யானுளத்
தடன்மடு திறந்தழுந் தன்பொ டாண்டகை
கடன்மடு திறந்தென வரங்கள் காலவின்
புடன்மடு மூழ்கினா னுவந்த சிந்தையான். |
|
மடல் மடு வழிந்த
தேன் வாகையான் உளத்து,
அடல் மடு திறந்து, அழுந்து அன்பொடு, ஆண்டகை,
கடல் மடு திறந்து என வரங்கள் கால, இன்பு
உடன் மடு மூழ்கினான், உவந்த சிந்தையான். |
இதழாகிய குளத்தினின்று
தேன் வழிந்த மலர்க்கொடியை
உடையவனாகிய சூசையின் உள்ளத்தில், ஆண்டவன் தன் வல்லமையாகிய
குளத்தைத் திறந்துவிட்டு, பதிந்த அன்போடு, குளத்தில் கடலைத்
திறந்துவிட்டாற் போல வரங்களைப் பொழியவே, முற்கூறிய அச்சம் நீங்கி
மனத்தில் உவகை கொண்டவனாய், இன்பம் என்னும் குளத்தில் உடன்
மூழ்கினான்.
'தேன் வழிந்த
வாகையான்' எனவும், 'இன்பு மடு உடன் மூழ்கினான்'
எனவும் சொற்களை மாற்றிக் கூட்டுக.
22 |
இற்றையா
கையிலிவை காண விச்சையா
லொற்றையா ழியன்கட லொல்லென் றீர்த்தெழக்
கற்றையாங் கரங்களை நீட்டுங் காட்சிபோ
லற்றையா ரொளியொடு சிவந்த தைந்திரி. |
|
இற்றை ஆகையில்,
இவை காண இச்சையால்
ஒற்றை ஆழியன் கடல் ஒல் என்று ஈர்த்து எழக்
கற்றை ஆம் கரங்களை நீட்டும் காட்சி போல்,
அற்றை ஆர் ஒளியொடு சிவந்தது ஐந்திரி. |
இவையெல்லாம்
நிகழ்ந்து கொண்டிருக்கையில், இவற்றைக் காண
வேண்டுமென்ற ஆசையினால், ஒற்றைச் சக்கரத் தேரில் வரும் ஞாயிறு
கடலை விரைவாக இழுத்துத் தள்ளி மேலே எழுந்து வருமாறு கதிர்த்
திரளாகிய தன் கைகளை நீட்டும் காட்சி போல், கீழ்த்திசை அன்று
நிறைந்த ஒளியோடு சிவந்து தோன்றியது. |