பக்கம் எண் :

முதற் காண்டம்407

     கதிரவனுக்கு ஆயிரம் கைகளும், அவன் தேருக்கு ஒற்றைச் சக்கரமும்
கூறுதல் மரபு.
 
              23
மருடரு மிருடனை மாறிச் சூசையுள்
ளருடரு நயநல மன்று காட்டிட
விருடரு முலகினி திருளுந் தீர்ந்தன
பொருடரு மொளியவன் பொலிந்து சேரவே.
 
மருள் தரும் இருள் தனை மாறிச் சூசை உள்
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட,
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன,
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே.

     மயக்கம் தரும் ஐயமும் அச்சமுமாகிய இருள் தன்னை விட்டு மாறி,
சூசை தன் உள்ளத்தில் கொண்ட ஆண்டவன் அருள் தரும் இன்பத்தின்
நலத்தை அன்று உலகத்திற்குக் காட்டுமாறு, பொருள்களைக் கண்ணுக்குக்
காட்டித் தரும் ஒளி படைத்த பகவலன் பொலிவோடு வந்து சேரவே,
இருளைத் தரும் இவ்வுலகத்திலுள்ள இருள்களெல்லாம் இனிதே தீர்ந்தன.

     ஒளியின்மையாகிய இருளோடு பாவம் பிணி முதலிய இருள்களும்
கூட்டி, 'தீர்ந்தன' என்று பன்மையாற் கூறினார். 'இனிது தீர்ந்தன' என்பதை
உளம் இனிமை எய்திடத் தீர்ந்தன எனக் கொள்க.
 
                24
செய்ப்படு முலகினர் வணங்குஞ் சீர்மையாள்
மொய்ப்படு பணியினி முயல்த லாங்கொலோ
மெய்ப்படு மடிமையான் வினைசெய் வேனெனாக்
கைப்படு தொழிலெலாங் கனிவொ டேற்றினான்.
 
"செய்ப் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள்
மொய்ப் படு பணி இனி முயல்தல் ஆம்கொலோ?
மெய்ப் படும் அடிமை யான் வினை செய்வேன்" எனா,
கைப் படு தொழில் எலாம் கனிவொடு ஏற்றினான்.