பக்கம் எண் :

முதற் காண்டம்408

     "செந்நிறங் கொண்ட வானுலகத்தவரும் வணங்கத்தக்க சிறப்புக்
கொண்ட மரியாள், இனிமேல் திரண்டு கிடக்கும் வேலைகளைத் தான்
செய்தல் தகுமோ? உண்மையின்படி, அவளுக்கு அடிமையாகிய நானே
இப்பணிகளையெல்லாம் செய்வேன்" என்று சூசை எண்ணி, தன் கைக்கு
அகப்பட்ட தொழில்களையெல்லாம் கனிவோடு தானே செய்து முடித்தான்.

     "ஆம்கொலோ' என்றவிடத்து இடையே 'கொல், அசைநிலை.
ஏற்றினான் எனும் சொல் இயற்றினான் என்ற சொல் திரீபு:
 
                     25
படைத்தவன் றாயடி பணிந்து போற்றவும்
துடைத்ததன் னையமுந் துகளுஞ் சொற்றவு
முடைத்தன மனநசை பொறாத வுண்மையா
லடைத்தன கதவின்வா யணுகி நின்றனன்.
 
படைத்தவன் தாய் அடி பணிந்து போற்றவும்,
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும்,
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால்,
அடைத்தன கதவின் வாய் அணுகி நின்றனன்.

     யாவற்றையும் படைத்த ஆண்டவனுக்குத் தாயாக வாய்த்தவளின்
அடிகளை வணங்கிப் போற்றவும், ஆண்டவனே கனவு மூலம் துடைத்த
தனது ஐயத்தையும் அதன் குற்றத்தையும் எடுத்துச் சொல்லவும், உடைத்துக்
கொண்டு வருவது போன்ற தன் மனத்து ஆசையைப் பொறுக்க இயலாத
தன்மையால், மரியாள் அடைத்துக் கொண்டிருந்த கதவின் பக்கம் அணுகி
நின்றான்.

     'சொற்ற' என்பது, 'சொல்லி மன்னிப்புப் பெற' என்ற கருத்தை
உட்கொண்டது.