பக்கம் எண் :

முதற் காண்டம்411

                 29
துன்புறச் செய்ததோந் துடைத்த வாசிநீ
யன்புறச் சொல்லினா லல்ல துன்னடி
பின்புறப் பெயர்வனோ வெனப்பெ ருக்கனை
யின்புறத் துயருற விரங்கு வானரோ.
 
"துன்பு உறச் செய்த தோம் துடைத்த ஆசி நீ
அன்பு உறச் சொல்லினால் அல்லது, உன் அடி
பின்பு உறப் பெயர்வனோ?" என, பெருக்கு அனை
இன்பு உற, துயர் உற இரங்குவான் அரோ.

     "நீ துன்புறுமாறு நான் செய்த குற்றத்தைத் துடைத்ததற்கு
அடையாளமான ஆசிமொழியை நீ அன்போடு எனக்குச் சொல்லினாலன்றி,
உன் அடியை விட்டுப் பிற்பட்டு நீங்குவேனோ?" என்று சூசை சொல்லி,
வெள்ளப் பெருக்கைப்போல் ஒரு பக்கம் இன்புறவும், மறு பக்கம்
துன்புறவுமாக மனத்துள் இரங்குவான்.

     'அரோ' அசை நிலை.
 
                30
பொருடொடு மருமறை வடிவம் போன்றொளி
ரருடொடு மடவர லகத்தி லின்புற
விருடொடு துயரகன் றறிவை யீந்தன
தெருடொடு மிறைவனைச் சிறந்து போற்றினாள்.
 
பொருள் தொடும் அரு மறை வடிவம் போன்று ஒளிர்,
அருள் தொடும் மடவரல், அகத்தில் இன்பு உற,
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன
தெருள் தொடும் இறைவனைச் சிறந்து போற்றினாள்.

     உண்மைப் பொருளைக் கொண்டு நிற்கும் அரிய வேதத்தின் வடிவமே
போன்று ஒளிரும், தெய்வ அருளைக் கொண்டு நிற்கும் மங்கையாகிய
மரியாள், தன் மனத்தில் இன்புறும் வகையில் இருளோடு கூடிய ஐயமாகிய
துயரம் அகலுமாறு தன் துணைவனுக்கு அறிவைத் தந்தருளிய தெளிவின்
ஊற்றாகிய ஆண்டவனைச் சிறந்த விதமாய்ப் போற்றினாள்.