பக்கம் எண் :

முதற் காண்டம்413

கதிர்ந்து எழும் அன்பினான் காந்தை வீழ்கு உறா
எதிர்ந்து, "எழுக" என மலர்க் கரம் கொடு ஏந்தினான்.
விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள்,
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள்.

     கதிர் விட்டு எழும் அன்பு கொண்ட சூசை தன் மனைவி தன் காலில்
விழாதவாறு எதிரே வந்து, "எழுவாயாக" என்று கூறியவாறே தன் மலர்
போன்ற கைகளால் ஏந்திக் கொண்டான். மிகுந்து வழியும் தெய்வ
வரங்களால் பொங்கும் மாட்சிமையுள்ள மரியாள் நடுங்கினாள். உள்ளத்தில்
எழுந்த தாழ்மையின் காரணமாக மீண்டும் அவன் கால்களில் வீழ்ந்தாள்.
வீழ்ந்து, பின்வருமாறு கூறுவாள்:

     எழுக + என - 'எழுக வென' என்று வரவேண்டியது. 'எழுகென'
எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
 
                 33
என்னுளங் கொளாக்கனி வியற்று மன்பினோய்
நின்னுளங் கொளாத்துயர் நெடிது செய்தியான்
றுன்னுளங் கொளாத்துகள் சூட்டி னேனென
நன்னுளங் கொளாதயை நல்கல் வேண்டுமே.
 
"என் உளம் கொளாக் கனிவு இயற்றும் அன்பினோய்,
நின் உளம் கொளாத் துயர் நெடிது செய்து, யான்
துன் உளம் கொளாத் துகள் சூட்டினேன் என
நன் உளம் கொளா, தயை நல்கல் வேண்டுமே.

     "என் உள்ளம் தாங்காத இன்பத்தை எனக்குச் செய்யும்
அன்புடையவனே, உன் உள்ளம் தாங்காத துயரத்தை நெடு நாட்களாய்ச்
செய்து, நெருங்கிய இரண்டு உள்ளங்கள் தமக்குள் செய்து கொள்ளத் தகாத
குற்றத்தை நான் சுமந்துகொண்டேன் என்று. உனது நன்மை கொண்ட
உள்ளத்தில் கொள்ளாமல், எனக்கு உன் தயவைத் தருதல் வேண்டும்.

     செய்து + யான் - செய்தியான்: யகரத்தின் முன் குற்றுகரம்
இகரமாய்த் திரிந்தது.