34 |
மன்னராள்
மன்னவன் வகுத்த மாவரந்
தன்னையான் மறைப்பது தகவ தாமென
வென்னையா ளுடையவ னேவ லின்மையா
லுன்னையான் சூல்வினை யொளித்த தாமென்றாள். |
|
"மன்னர் ஆள்
மன்னவன் வகுத்த மாவரம்
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என,
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால்,
உன்னை யான் சூல் வினை ஒளித்தது, ஆம்" என்றாள். |
"கருப்ப நிக்ழ்ச்சியை
உனக்கு நான் மறைத்தது, அரசரையெல்லாம்
ஆளும் அரசனாகிய ஆண்டவன் வழங்கிய பெரிய வரத்தை மறைப்பது
தக்கது என்று கருதியதாலும், அதுபற்றி என்னை அடிமையாகக் கொண்ட
ஆண்டவனின் கட்டளை இல்லாமையாலும் ஆகும்" என்றாள்.
"அரசனின் இரகசியத்தை
மறைத்துக் காப்பாற்ற வேண்டியது
உண்மையே." (ப. ஏ. தொபியாசு ஆகமம் 12:7) என்ற கருத்து இங்குக்
குறிப்பிடப்படுகிறது.
35 |
என்றலர்க்
கரமெடுத் திவனை யேத்தினாள்
மன்றல ருயிர்த்தவெண் வாகை யாளனுந்
துன்றலர் கடுத்துடு சூட்டு மங்கையுஞ்
சென்றல ரிறைவன்றாள் செறிந்து போற்றினார். |
|
என்று, அலர்க்
கரம் எடுத்து இவனை ஏத்தினாள்.
மன்று அலர் உயிர்த்த வெண் வாகையாளனும்,
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும்
சென்று, அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார். |
என்று இவ்வாறு
சொல்லி, அவள் மலர் போன்ற தன் கைகளைக்
கூப்பி இவனைப் போற்றினாள், மலர் பரப்பிய மணம் கொண்ட வெண்
கொடியை உடைய சூசையும், செறிந்த மலர் போன்று விண்மீன்களை
முடியாக அணிந்த மங்கை மரியாளும் பின் உள்ளே சென்று மலர் போன்ற
ஆண்டவன் திருவடிகளை மனத்தில் செறியக் கொண்டு போற்றினர்.
மன்று
- 'மன்றல'் என்பதன் கடைக்குறை. |